நிலா நீ வானம் காற்று

ஒருபாட்டு கொஞ்சம் பின்னணி

வெளிநாடுகளுக்கோ வெளிமாநிலங்களுக்கோ சென்று பாடல் கம்போசிங்கில் ஈடுபடும்போது பல சுவாரஸ்யமான சம்பவங்கள் நிகழ்வதுண்டு. சொன்னால் நாள்முழுவதும் சிரித்துக்கொண்டே இருக்கலாம். பொதுவில் யாருக்கும் தெரியவராத அச்சம்வங்களைப் பாடல்களுடன் பொருத்திப் பார்க்கையில் கூடுதல் சுவை ஏற்படும். அப்படி ஒரு பாட்டு, `பொக்கிஷம்’ திரைப்படத்தில் இடம்பெற்ற `நிலா நீ வானம் காற்று’ பாடலில் நிகழ்ந்தது. இயக்குநர் சேரனுடன் எனக்குள்ள அன்பும் தொடர்பும் பலர் அறியாததவை. பொக்கிஷம் திரைப்படத்தில்தான் அவருடன் முழுபடத்திற்கும் பாடல் எழுதும் சந்தர்ப்பம் வாய்த்தது.

பாடல் கம்போசிங் கேரள ஆலப்புழாவின் படகுவீட்டில் நடந்தது. அந்தக் கம்போசிங் சமயத்தில் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணனும் உடன் வந்திருந்தார். எனக்கும் அவருக்கும் ஒரே அறை. பகல் முழுதும் சேரனுடன் கதைகுறித்து பேசும் அவர், இரவுகளில் என்னுடன் இலக்கிய உரையாற்றுவார். நல்ல அனுபவம். இசையமைப்பாளர்கள் சபேஷ்-முரளி (தேவாவின் சகோதரர்கள்). காலையில் படகுவீட்டில் பயணத்தை ஆரம்பித்தால் இரவுவரை யாத்திரை நீளும். `செம்மீன்’ திரைப்படத்துக் கதாநாயனகாக ஒவ்வொருவரும் தங்களை நினைத்து இஷ்டத்துக்கு கற்பனையில் மிதப்போம். `கடலினக்கெர போனோரே’ பாடாத குறைதான். உதவியாளர்களில் சிலர் தங்களின் திரைக்கதைகளை படகின் பின்கட்டில் நின்றபடி என்னிடம் சொல்லத் தொடங்குவர்.

அங்கேயே சமைத்துத்தருவார்கள். ஏரிமீன்களைப் பிடித்து, படகிலே தயாரித்துத்தரும் அவ்வுணவின் மகிமையில் வேலைக்கு பங்கம். ஆனாலுமென்ன கலைஞர்களில்லையா அனுபவித்தோம். ஒருவாரம் காலம். தினமும் காலையில் கிளம்புவது, கதை, இலக்கியம், சினிமா, அரசியல், தத்துவம் என்று விவாதித்துவிட்டுபோன வேலையே நடக்காமல் அறைக்குத் திரும்புவோம். எஸ்.ராவின் உரையைப் பற்றித்தான் தெரியுமே, எதுகுறித்தும் பேசுவார். திசைமாறிய பேச்சிலும் எண்ணங்களைத் திறந்துவைப்பார். ஒருநாள் மதியம், இயக்குநர் சேரன் லேசாக ஆரம்பித்தார். `இப்படியே போகிறதே இன்றாவது பாடலைப் பற்றி யோசிப்போமா’ என்றார். நகைகூடிய சபேஷூம் முரளியும் அலட்டாமல் சிரித்துவிட்டு, `நாங்க அதற்குத்தானே இருக்கிறோம் சொல்லுங்கள்’ என்றனர். என்னிடம் திரும்பி,`கவிஞரே தயாரா’ என்றார். நான் `ஊரில் பையைத் தூக்கும்போதே அதில் சில வார்த்தைகளையும் சேர்த்துத்தானே எடுத்துவந்திருக்கிறேன்’ என்றேன். எஸ்.ரா. தூரத்திலிருந்து முறுவல் மிளிரப் புன்னகைத்தார்.  

சபேஷ்-முரளி கருவிகளை முடுக்கும் மும்முரத்தில் ஈடுபட்டனர். அந்நேரம் ஏரியில் வேக அலைகள். படகை ஒருக்களித்தன இயல்பாகவே விரல்களை கீ- போர்டில் சபேஷூம் முரளியும் வைக்க, `தனா னா னானன் னானா’ என்றொரு சந்தம் எழுந்தது. சேரன், `சபாஷ் அருமை’ என்றார். அது மெட்டில்லை. மெட்டுக்கான தயாரிப்பு மட்டுமே. அலையின் அசைவிற்கேற்ப தாமாக எழுப்பியவை. `சார் இது டியூன் இல்ல. இயல்பா கை பட்டுடுச்சு’ என்றார் சபேஷ். `இல்ல இயற்கையா இப்படியே ஒரு பாட்டு எழுதினா என்ன’ என்றார் சேரன். எனக்கு அது, புதிதாக இருந்தது.

யோசித்து மெட்டமைக்காமல் இயற்கையில் எழும் ஓசைக்கேற்ப பாடலை அமைக்கும் முயற்சி. காதல் இயல்பாக வருவதுதானே. இசையையும் மெட்டையும் ஏன் தயாரிக்க வேண்டும். சார், `நானும் சந்தத்திற்கு யோசிக்காமல் வார்த்தைகளைத் தருகிறேன். இந்த விளையாட்டு எங்கே முடிகிறது பார்ப்போம்’ என்றேன். சொன்னதுபோல அலையின் தளும்பல்களுக்கேற்ப சந்தங்கள் வந்துவிழ, நான் வார்த்தைகளைச் சொல்லத் தொடங்கினேன்.

நிலா, நீ, வானம், காற்று,  என ஒவ்வொன்றாகச் சொல்லச் சொல்ல எழில்பாரதி (சேரன் உதவியாளர்) காகிதங்களில் அவற்றை எழுதிக்கொண்டார். `இந்தத் தனித்தனி வார்த்தைகளை எப்படி இணைப்பது’ என்றார். `எல்லாவற்றையும் பாடலில் இணைத்துவிடலாம்’ என்றதும், இயக்குநர் சேரனுக்கு சந்தோசம் தாளவில்லை. அவர் படங்களில் பாடல்களுக்கு அதீத சிரத்தை எடுத்துக்கொள்வார். நல்ல பாடல்கள் வாங்கத் தெரிந்த இயக்குநர்களே தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெற்றியுடன் ஜீவிக்கிறார்கள்.

ஒருபக்கம் மீன் சமையல். இன்னொருபக்கம் பாட்டுச் சமையல். ஒரே பசி. மொத்த பாடலையும் பதினைந்து நிமிடத்திற்குள் முடித்துவிட்டோம். நாங்கள் எங்கே முடித்தோம், அதுவே முடிந்தது. எழுதிய காகிதத்தை வாங்கி, தனித் தனி சொற்களாக எழுதியவற்றை கொஞ்சம் திருத்தினேன். காதல் சொற்களாக வந்திருந்தன. சூழல், `தமிழ் இலக்கியம் படித்தவள் எழுதும் காதல் கடிதம், என்பதால், காதல் கவிதைகளில் பெரும்பாலும் இடம்பெறும் சொற்களைப் பல்லவியாக்கினேன். இணைப்பாக இது யாவுமே நீதான் எனினும், உயிரென்றே உனை நான் சொல்வேன் என்று முத்தாய்ப்பைப் பொருத்தினேன். சரணத்தில், அன்புள்ள மன்னா என்று ஆரம்பித்து சங்க இலக்கிய நூல்களின் பெயரைப் பட்டியலிட்டேன். குறும்பாக படவா, திருடா. சேரனுக்குப் பிடித்திருந்தது. அவரும் அப்பாடலுக்குள் சில அபிப்ராயங்களைத் தெரிவித்தார்.

`அன்புள்ள, அன்புள்ள என்றே வருகிறதே அன்புள்ள என்பதன் இறுதியாக எதைச் சொல்வீர்கள்’ என்றார். யோசிக்கலாம் என்றேன். இறுதியாக அன்புள்ள அன்பே என்று முடிக்கலாம் என்றேன். அன்புக்குமேல் எதுவுமில்லை. அன்புள்ள உயிரென்று முடித்தால் உயிர் போய்விடும். அன்புள்ள காற்றே என்றால் காற்று நின்றுவிடும். எனவே, `அன்புள்ள அன்பே’ என்றதும் அவருக்குத் திருப்தி. `அன்புள்ள அன்பேவிற்கு மாற்றாக வேறு ஏதாவது யோசிக்காலாமா’ என்றார். `அன்புக்கு மேலே எதை சார் யோசிப்பது’ என்றதும் ஆமோதித்தார். அப்படியே அத்திரைப்படத்தின் அனைத்துப்பாடல்களும் முடிந்து ஊர்திரும்பினோம்.

அப்போது எனக்கு திருமணம் ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தது. பத்திரிகையும் தயாராகி அழைக்கும் வேலையை ஆரம்பித்தேன். ஒருபுறம், பொக்கிஷம் திரைப்பாடல் பதிவுகள். மற்றொருபுறம், திருமண வேலைகள். பத்திரிகையை இயக்குநர் சேரனுக்குக் கொடுக்கபோனபோது, `ஏன் அன்புள்ள அன்பேவிற்கு இணையே இல்லை என வாதிட்டீர்கள் என இப்போது புரிகிறது’ என்றார். என் மனைவியின் பெயர் `அன்புச்செல்வி’. அன்புள்ள அன்பே என்று நான் வம்படியாக வாதிட்டதை என் திருமணத்திலும் வந்துபேசி இயக்குநர் சேரன் கலகலப்பாக்கினார்.

நாமாக எதையும் யோசிப்பதில்லை. அதுஅது தாமே தம்மை அமைத்துக்கொள்கிறது. பாடலும் வாழ்க்கையும்கூட அப்படித்தான். திட்டமிட்டு எதையுமே நம்மால் நிகழ்த்தியோ சாதித்துவிடவோ எண்ணுவது பிரமை. நாம் வெறும் கருவிகளே என்று விலகி நின்று பார்த்தால், எதுவும் எப்போதும் சந்தோசம் தந்துவிடும். இதே திரைப்படத்தில் `அஞ்சல்பெட்டியைக் கண்டவுடன்’ என்றொரு பாடல் இருக்கிறது. அது, ஆண்டன் செக்காவ்வின் ஒரு கதையை மையமிட்டு அமைத்த வரி. அதை தனியாகச் சொல்கிறேன். இப்போதைக்கு நிலா, நீ, வானம், காற்றைக் கேளுங்கள். இயல்பு எப்போதுமே ஈர்ப்புக்குரியது. எளிமை அதைவிட. மீண்டும் ஒரு `பாரதிகண்ணம்மா’வைப் போற்றும் ’பொற்காலம்’ வரவேண்டும்.

%d bloggers like this: