யுகபாரதி

Archive for the ‘தொடர்பதிவு’ Category

முன்னாள் சொற்கள் 8

Posted by யுகபாரதி மேல் ஏப்ரல் 26, 2010

வயதுக்கு வந்த பெண்ணாக இருக்கும் பட்சத்தில் நிச்சயமாக அந்தப்பெண் தனக்குரிய ராஜகுமாரனைத் தேடுபவளாக மட்டுமே காட்டப்படுபவள்தான் தமிழ் சினிமா கதாநாயகி.நீண்ட நெடுங்காலமாக இருந்துவரும் இந்த நோயிலிருந்து கதாநாயகியை எந்த இயக்குநரும் காப்பாற்றுவதாகத் தெரியவில்லை.அவள் புத்தகத்தை மார்ப்பில் அணைத்துக்கொண்டு கல்லூரிக்குப் போகக்கூடும். ஆனாலும்,அவள் கல்லூரி போவதன் நோக்கம் தன் நாயகனைத் தேர்ந்தெடுப்பதற்காகவே.பழகிப்போன இதே சூழலுக்குப் பல பாடல்கள் வந்துவிட்டன.ததும்புகின்ற அழகுகளோடு தாவணியிலோ சுடிதாரிலோ வளைய வரும் பாடல் எனக்கு வந்துவிடக் கூடாதென்று நினைத்திருக்கிறேன்.என்றாலும் விதி வலியதாயிற்றே என்னை மட்டும் விட்டுவிடுமா என்ன?

பழகிப்போன எத்தனையோ பழைய சூழலுக்குப் புதிய பல்லவியை எழுதியே ஆகவேண்டிய கட்டாயம் ஒரு பாடலாசிரியருக்குத் தவிர்க்கமுடியாதது.ஒரு பெண்ணின் கனவு வெறும் காதலைத் தேடுவதாக மட்டுந்தான் இருக்குமா என்ற கேள்விகளைத் தவிர்த்துவிட்டு ஆமாம் அதுதான் முக்கியம் என்று எழுதினால் எப்படியிருக்கும் ? அப்படி எழுதப்பட்ட பாடல்தான் கண்ணன் வரும் வேளை.இயக்குநர். எழில் என் இதயத்துக்கு நெருக்கமான இயக்குநர்களில் ஒருவர்.முதல்படமான துள்ளாத மனமும் துள்ளும் படத்தின் மூலம் அளப்பரிய வெற்றியைச் சமைத்தவர்.வார்த்தைகளுக்கு வலித்துவிடுமோ என மென்மையிலும் மென்மையாகப் பேசுபவர். தீபாவளி திரைப்படத்திற்காக என்னை அழைத்திருந்தார்.ஏற்கனவே மூன்று பாடல்கள் முடிந்திருந்த நிலையில்.

மெட்டைக் கேட்டதுமே உங்களுக்கு புரிந்துவிட்டதுதானே அதேதான் என புருவம் உயர்த்தி எழுதிக்கொடுங்கள் என்றார்.நான் மேலே கூறிய அத்தனை விஷயங்களும் ஒருபுறமிருந்தாலும்  இந்தப்பாடலுக்காக அமைக்கப்பட்டிருந்த மெட்டு வெகுவாக என்னைக் கவர்ந்துவிட்டது.தாவணிப்போட்ட தீபாவளி பாடலுக்குப்பிறகு யுவனுக்கும் எழுதும் பாடலிது.எனக்கும் யுவனுக்கும் இடையே தீபாவளி அவ்வப்போது வருவதாக நினைத்துக்கொண்டேன்.செய்வது எதுவாயினும் அதை தீவிரமாகவும் காரிய சிரத்தையோடும் செய்ய வேண்டும் என்பதிலிருந்து எப்போதும் நான் தவறுவதில்லை.

பல்லவி

கண்ணன் வரும்வேளை
அந்திமாலை நான் காத்திருந்தேன்
சின்னச் சின்னத் தயக்கம்
செல்ல மயக்கம் அதை ஏற்கநின்றேன்

கட்டுக்கடங்கா
எண்ண அலைகள்
றெக்கை விரிக்கும்
ரெண்டுவிழிகள்
கூடுபாயும் குறும்புக்காரன்
அவனே
கண்ணன் வரும் வேளை என்று தொடங்கி ஒரே மூச்சில் பல்லவியை முடித்தேன்.திரும்பத்திரும்ப அந்த மெட்டு என்னை வசீகரித்து மேலும் மேலும் எழுது என்றது போலிருந்தது.கூடுபாயும் என்ற சொல் என்னை அறியாமல் வந்துவிழுந்தது.அதற்குக் காரணம் அப்போது நான் சூஃபிகள் பற்றிய புத்தகம் வாசித்துக்கொண்டிருந்ததாக இருக்கலாம்.சரணத்தைத் தொடங்குவதற்கு முன்பாக கதாநாயகியின் ஆசை குறித்து ஒரு சின்னப்பட்டியலை மனசுக்குள் தயாரித்துக்கொண்டேன்.ஆசைகள் அற்றுப்போய்விட்டால் வாழ்க்கையின் அர்த்ததை நாம் ஒவ்வொருவரும் இழந்துவிடுவோம்.பூமியில் தோன்றும் அத்தனை ஜீவராசிகளுக்கும் ஆசை உண்டுதான்.அதை எப்படி இந்தப்பாடலுக்குள் கொண்டுவருவது என யோசித்தபோது மெட்டே அதற்கு உதவி புரிந்தது என்பதை சொல்லாமல் இருக்க முடியவில்லை.

சரணம்01

வான்கோழி கொள்ளும் ஆசை
ஆடித் தோற்பது
தைமாசம் கொள்ளும் ஆசை
கோடைப் பார்ப்பது

தேர்க்கால்கள் கொள்ளும் ஆசை
வீதி சேர்வது
ஓரீசல் கொள்ளும் ஆசை
தீயில் வாழ்வது

கூறவா இங்கு எனது
ஆசையை
தோழனே வந்து உளறு
மீதியை

கோடிக் கோடி ஆசை
தீரும் மாலை

– இந்த ஆசைகளின் நீட்சியாக வேறு எதை எதைச் சொல்லாமல் என எனக்குள் ஒரு விவாதமே தொடங்கிற்று.ஆசை கொள்ளுதல் என்பதும் பாசம் வைத்தல் என்பதும் ஒரே சாளரத்தின் வழியே பரவும் ஒளிதான் என்பதால் பாசத்தின் வெகுமதியைச் சற்று விரித்துப்பாக்கத் தொடங்கினேன்.பாடலின் கணம் கூடிவிடாமல் அதே சமயம் ஜனரஞ்சகத் தன்னையை இழந்துவிடாமலும் எழுவது சமயத்தில் சவாலாகிவிடுவதுண்டு.என்றாலும், ஒருபாடலின் மைய சரடு நோக்கிச்செல்லும் பாதை பிறழாமல் இருக்க வேண்டுமானால் கூடுதல் நிதானம் தேவை.எனவே,மறுநாள் அதிகாலையில் அமர்ந்து அடுத்த சரணத்தை எழுதினேன்.பத்து நிமிஷத்தில் எழுதி முடித்துவிட்டேன் .ஒன்றைப் பிடிக்கும் வரைதான் சிரமம்.பிடித்துவிட்டால் சட சடவென பற்றுக்கொண்டு மேலேறிவிடலாம்.இணையதளத்தில் பலருக்கும் இந்தப்பாடல் பிடித்துப்போனதாக எழுதிய கட்டுரைக்களுக்குக் காரணமும் இந்த லகுத்தன்மைதான் என நினைக்கிறேன்.

சரணம்02

பூவாசம் தென்றலோடு
சேரவேண்டுமே
ஆண்வாசம் தொட்டிடாத
தேகம் ஊனமே

தாய்ப்பாசம் பத்துமாதம்
பாரம் தாங்குமே
வாழ்நாளின் மிச்சபாரம்
காதல் ஏந்துமே

நீண்டநாள் கண்ட
கனவு தீரவே
தீண்டுவேன் உன்னை
இளமை ஊறவே

நீயில்லாமல் நிழலும்
எனக்குத் தொலைவே

-தாய்ப்பாசம் பத்துமாதமே பாரம் தாங்கும். மீதமுள்ள காலங்களில் நேரும் சுமைகளை காதலே தாங்கும் என்று எழுதியதை என்னுடைய அம்மா எப்படி எடுத்துக்கொள்வார்களோ என தயக்கமாயிருந்தது.பாடல்களைத் தாண்டி கவிதைகளைத் தாண்டி அம்மாவின் பிம்பம் ஒவ்வொரு ஆணுக்குள்ளும் ஒளிந்திருக்கிறது.இப்பாடல் ஒரு பெண் பாடுவதாக அமைவதால்என்னுடைய பார்வை யாருக்கும் எந்த சங்கடத்தையும் ஏற்படுத்தவில்லை.ஆண் தீண்டா உடல்,ஊனமென்பது மிகையுணச்சியின் வெளிப்பாடு.காட்டக்கூடாது என வைராக்கியமாக இருந்தாலும் ஆணின் அகந்தை இப்படியான இடங்களில் வெளிப்பட்டுவிடுகிறது.

கல்லூரிக்குப் போகும் பெண்களும் சராசரி உணர்வுகளுக்கு ஆட்பட்டவர்களே.அறிவும் கல்வியும் அவர்களை நம்முடைய சமூகம் கட்டமைத்துள்ள எந்தக் கலாச்சார வேலிகளையும் தாண்டுவதற்கு அனுமதிப்பதில்லை.பாடலை இயக்குநர் எழில் பாந்தமாக படமாக்கிய விதமும்
குரலால் இழைத்த அனுராதா ஸ்ரீராமும் மதுஸ்ரீயும் என் நன்றிக்குரியவர்கள்.எவரையும் அல்லது எதையும் நான் நேசிப்பது ஏன் என்று மட்டும் என்னால் விளக்கிச்சொல்லவே இயல்வதில்லை என்று ஒரு நெடிய வாக்கியத்தின் இடையே வால்ட் விட்மென் எழுதிச்செல்வார்.அதையே
நானும் ஒவ்வொரு தருணத்திலும் நகலெடுத்துக் கொண்டிருக்கிறேன்.

Advertisements

Posted in திரைப்பாடல், தொடர்பதிவு | குறிச்சொல்லிடப்பட்டது: , | Leave a Comment »