யுகபாரதி

Archive for the ‘மரபு’ Category

நினைவலை

Posted by யுகபாரதி மேல் பிப்ரவரி 9, 2010

பனைமரத்து நிழலே; எங்கள்
பாதைகளின் சுவடே; காலச்
சுனையெழுந்து பெருகி ஓடும்
சூரியனின் கர்ப்பத் தீவே
நினைவெல்லாம் உன்னைத் தாங்கி
நிற்கின்ற நானோர் அகதி;
முனைமழுங்கி போக ஊசி
முன்வருவேன் உறவைத் தைக்க

பாடங்கள் பயின்ற கூடம்
பாழடைந்து போச்சா? நட்பு
ஓடங்கள் குளித்த ஆறு
உருக்குலைந்து போச்சா? நாளும்
சூடங்கள் கொளுத்தி வைத்து
ஜோதியிலே செய்த பூசை
மாடங்கள் இடிந்து போச்சா?
மாடுகன்று மரித்துப் போச்சா?

வாயிலிலே மேய்ந்த கோழி
வலுவிழந்து செத்துப் போச்சா?
சேயெழிலில் மகிழ்ந்த திண்னை
சிதையுண்டு போச்சா? இன்பத்
தாயவளின் மார்புக் கூட்டில்
தங்கிக்கண் விழித்த வீட்டு
நாய்கூட இறந்து போச்சா?
நடவு செய்த காணி போச்சா?

கொலுசொலி புரண்ட தெரிவின்
குதிகால்கள் குன்றிப் போச்சா?
சிலுசிலுத்த பறவைக் கூடும்
சிற்றெறும்பின் வாழ்வும் போச்சா?
கொலுவிருந்த பொம்மை போச்சா?
கொய்திருந்த செம்மைப் போச்சா?
நிலுவையிலே ஏதும் இன்றி
நிரந்தரமாய் எல்லாம் போச்சா?

அம்புலியைக் காட்டி எங்கள்
அன்னையிட்ட அமுதம் போச்சா?
கம்பளிக்குள் சுருண்டு கொண்ட
வெம்படகும் கரையும் போச்சா?
வெள்ளந்தி நுரையும் போச்சா?
செம்பருத்திச் செடியும் பூவும்
சீரழிவில் தொலைந்து போச்சா?

அத்தனையும் இழந்து விட்டு
அந்நியனாய் வேற்று மண்ணில்
எத்தனைநாள் கழியும் என்று
ஏங்குகின்ற உயிரே உன்னைப்
பத்திரமாய்க் காக்க வேண்டும்
படைக்கின்னும் ஆட்கள் தேவை
கொத்துகின்ற கோரப் பகையை
குழிதோண்டிப் புதைக்க வேண்டும்

அடுக்கடுக்காய் இழந்த தெல்லாம்
அவனிக்கும் தெரியும்; எங்கள்
விடுதலைக்குக் கொடுத்த வேர்வை
வீணருக்கும் தெரியும்; வெப்பத்
துடுப்பெடுத்துக் கடலை வென்ற
தொல்லைகளும் தெரியும்; வானை
நடுங்கவைக்கும் ஊர்தி செய்த
நம்பிக்கை எவர்க்கும் தெரியும்

பிறந்தால் வாழ்வோம் என்று
பித்தர்கள் உலகில் உண்டு
மறப்பதால் அமைதி என்னும்
மாயத்தில் உழல்வோர் உண்டு
இறவாமல் நாமி ருப்போம்
இனமீட்சி தீபம் ஏற்ற
பெறப்போகும் வெற்றி நாளை
பிள்ளையருக்கு எடுத்துச் சொல்ல

அரசமரம் சுற்றி; அந்த
ஆண்டவனை வேண்டி எம்மை
பிரசவித்தத் தாயை மீட்க
பிழைத்திருப்போம் வேட்கையோடு
வரப்போகும் விடியல் காண
வைத்திருப்போம் எங்கள் விழியை
சிரமங்கள் எதுவந் தாலும்
சேர்ந்திருப்போம் சாவோ மில்லை

Advertisements

Posted in கவிதை, மரபு | குறிச்சொல்லிடப்பட்டது: , | 1 Comment »