மருதகாசி : எழுத்துழவர்

ருமுறை தந்தை பெரியார் ‘இரண்டு புலவர்கள் இருக்கும் இடத்தில் ஒரு போலீஸ் ஸ்டேஷன் தேவை’ என்று கூறியிருக்கிறார். அதையே கொஞ்சம் மாற்றி, இரண்டு கவிஞர்கள் ஓர் இடத்தில் இருப்பார்களேயானால், அந்த இடத்தில் நான்கு காவல்நிலையம் தேவை என்று யாரோ ஒரு கிரகஸ்பதி கிளப்பிவிட்டிருக்கிறது. அதுமுதல், ஒரு கவிஞன் இன்னொரு கவிஞனைக் கண்டாலே கடித்துக் குதறிவிடுவான் என்பதுபோல பேசப்பட்டும் எழுதப்பட்டும் வருகின்றன. உண்மையில், கவிஞர்களும் பாடலாசிரியர்களும் ஒருவருக்கொருவர் அனுசரணையாக இருப்பதில்லை என்கிற கருத்து, அதீத கற்பனையாக மட்டுமே பார்க்கப்படவேண்டியது.

பொதுவாகப் படைப்பிலக்கியத்தில் அவர்களுக்கிடையே முரண்பாடுகள் உண்டே தவிர, தனிப்பட்ட முறையில் அவர்களிடம் காழ்ப்போ பகைமையோ மற்றவர்கள் சொல்லுமளவுக்குப் பூதாகரமாக வெளிப்பட்டதில்லை. அங்கொன்றும் இங்கொன்றும் நடந்த சம்பவங்களைப் பெரிதுபடுத்தி, அதையே கவிஞர்கள் பற்றிய மதிப்பீடுகளாக ஆக்கி வைத்திருக்கின்றனர். காலத்தின் நெடுங்கணக்கில் கம்பனும் ஒட்டக்கூத்தனும் அடித்துக்கொண்டு கட்டிப்புரண்டதாக எங்கேயும் தகவலில்லை. ஒருவர் படைப்பை இன்னொருவர் ஏற்கத் தயங்கியிருக்கிறார். அவ்வளவே. இது எப்படிச் சண்டையாகும்? புலமையில் ஒருவரைவிட ஒருவர் உயர்ந்தோ தாழ்ந்தோ இருப்பதுதானே எதார்த்தம்?

அந்த எதார்த்தத்தை மூன்றாமவர் சொல்வதற்கு முன்பு அவர்களே அலசி ஆராய்ந்து விவாதித்திருக்கின்றனர். இதை, சண்டையாகவும் சச்சரவாகவும் அணுகுவது, சம்பந்தப்பட்டவரின் தகுதியையும் ரசனையையும் சார்ந்தது. கவிஞர்களிடையே இருந்த பகையையும் காழ்ப்பையும் காட்ட எத்தனையோ கதைகளைத் “தனிப்பாடல் திரட்டு” நூலில் தொகுத்திருக்கின்றனர். அவற்றின் உண்மைத் தன்மையை ஆராயப் புகுந்தால் தலையே வெடித்துவிடும். அதில், பாதிக்கும் மேலானவை பொய்களால் உதித்தவை. மீதியோ சுவாரஸ்யமான கற்பனைகளால் எழுதப்பட்டவை. அவற்றை வைத்துக்கொண்டுதான் நம்முடைய சமதர்ம சிகாமணிகள், கவிஞர்களையும் பாடலாசிரியர்களையும் கேவலப்படுத்தி வருகின்றனர்.

அப்படியான தனிப்பாடல் திரட்டில் அன்பிற்கும் அனுசரணைக்கும் ஒரு கதையையேனும் நம்முடைய முன்னோர்கள் சேர்த்திருக்கலாம். அவ்விதம் சேர்க்க எண்ணியிருந்தால் பிற்காலத்தைய கவிஞர்கள் இரண்டு பேருடைய வாழ்வும் உறவும் கவனத்திற்கு வந்திருக்கும். இரண்டுபேர் என்று நான் சொல்வது, உடுமலை நாராயணகவியையும் மருதகாசியையும் முன்வைத்தே. ஏனெனில், அவர்களுக்கு இடையேயிருந்தது அன்பு மட்டுமல்ல. அதற்கும் மேலான ஒன்று. ஆற்றலால் அவர்கள் இருவருமே உயர்வான இடத்தில் வைத்துப் பார்க்கப்படுகிறவர்கள். அதே உயரத்தில்தான் அவர்களின் அன்பும் உறவும் இருந்ததென்பது வெளி உலகுகிற்குத் தெரியாதது. தனக்குப் பின்னே வந்த ஒரு பாடலாசிரியனைத் தாங்கிக்கொண்டவிதத்தில் உடுமலை விசேஷமானவர் என்றால், அதற்குச் சற்றும் குறைவில்லாத வகையிலேயே மருதகாசியும் இருந்திருக்கிறார். தன்னைக் தாங்கிக்கொண்ட உடுமலைமீது அவர் கொண்டிருந்தது பக்தியா, பாசமா என்று பிரித்தறிய முடியவில்லை. இரண்டுபேருடைய படைப்புகளைக் காட்டிலும், எனக்கு உயர்வாகப்படுவது அவர்கள் கொண்டிருந்த உறவுதான்.

பொதுச்சமூகத்தின் அல்லது பொதுப்புத்தியின் விளைவாக நமக்குள் அவசியமில்லாத பலவிஷயங்கள் கருத்துகளாகத் திணிக்கப்பட்டுள்ளன. அந்தக் கருத்தை ஆரம்பத்தில் ஏற்க மறுத்தாலும், நாளாக நாளாக அதுவே நம்முடைய வார்த்தையிலும் வெளிப்பட்டுவிடுகிறது. எல்லோருடனும் கலந்து பழகும் பல முன்னணிக் கவிஞர்களேகூட காவல்நிலையக் கூற்று குறித்து கண்டனங்கள் தெரிவித்ததில்லை. மாறாக, அதை ஒட்டிய செய்திகளையே பேசி வருகிறார்கள்.

அறத்தைப் பற்றி அதிகமாக எழுதக்கூடிய கவிஞர்கள், அதற்கு நேர் எதிராக வாழ்வில் நடந்துகொள்கிறவர்கள் என்னும் கருத்து நின்று நிலைத்திருக்கிறது. எதார்த்தத்தில் ஓரிருவர் அப்படியே என்றாலும், அதையே முழக்கமாக இயக்கமாக காத்துவருவது கவலையளிக்கிறது. உடுமலை நாராயணகவிக்கும் மருதகாசிக்கும் இடையே நிகழ்ந்த ஒரு சம்பவத்தைச் சுட்டிக்காட்டினால், கவிஞர்களுக்கு இடையே இருந்த கனிவைப் புரிந்துகொள்ளலாம். ஒருவர் மீது ஒருவர் வைக்கும் மதிப்பிற்கும் அப்பாற்பட்டதே படைப்பிலக்கிய மேன்மையென்பது என் எண்ணம்.

மருதகாசியின் சிறப்புகளை விவரிக்கவேண்டியதில்லை. ஆகப்பெரும் பாடலாசிரியராக நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை அவர் திரையில் எழுதியிருக்கிறார். “திரைக்கவித் திலகம்” என்கிற அடைமொழிக்கு ஏற்றவிதத்தில், அவர் ஆக்கி அளித்திருக்கும் பாடல்கள் காலம் கடந்தும் நிற்கத்தக்கவை. எடுத்துச்சொல்வதென்றால்கூட, அவருடைய முகவரிகளாக அமைந்த பாடல்கள் ஆயிரத்தைத் தாண்டும். எண்பதுகளில் ஒருமுறை தாம் தயாரித்த திரைப்படம் ஒன்றிற்கு பாடல் எழுத, மருதகாசியைக் கோவைத் தம்பி அழைத்திருக்கிறார். அதற்கு மருதகாசி, “எதற்கும் இளையராஜாவை ஒருவார்த்தை கேட்டுவிட்டுச் சொல்லுங்கள்” என்றிருக்கிறார். அதன்பின், “மனிதர்களை நீங்கள் சரியாக எடைபோடுகிறீர்கள்” என்று கோவைத்தம்பி மருதகாசியிடம் தெரிவித்திருக்கிறார். ஆக, காலத்தையும் காலத்திற்கேற்ப தன் நிலையையும் உணர்ந்தவராகவே மருதகாசி இருந்திருக்கிறார். ஒரு பாடலை எழுதுகிறபோதே காட்சியையும் சூழலையும் கற்பனை செய்யத் தெரிந்த அவர்க்கு, காலம் தன்னை எந்த இடத்தில் நிறுத்தியிருக்கிறது என்பது தெரியாமலா இருந்திருக்கும்? “வாராய் நீ வாராய்” என்று “மந்திரிகுமாரி”யில் எழுதிய அவரையே, திரைப்பாடல் எழுத வரவேண்டாம் எனச் சொல்லிய சம்பவங்களும் நடந்தேறியுள்ளன.

மருதகாசி, எழுத்துகளின் வழியே இன்றைக்கும் மக்கள் மத்தியில் தம் இருப்பைக் காட்டிக்கொண்டிருக்கிறார். எல்லாவிதமான சூழலுக்கும் மெட்டுக்கும் விரைவாக எழுதக்கூடிய ஒரே கவிஞராகவும் அவரே அக்காலத்தில் இருந்திருக்கிறார். தமிழ்த் திரையுலகமே கவிராயர் என்ற சொல்லுக்கு கட்டுப்பட்டிருந்த சமயத்தில், அந்தக் கவிராயரே மருதகாசியின் சொற்களை வியந்து பாராட்டியிருக்கிறார். கவிராயர் என்கிற பதம் உடுமலை நாராயணகவியைக் குறிப்பது. அவர் ஒருவரே திரைப்பாடலாசிரியர்களில் பிதாமகனாகக் கொண்டாடப்பட்டவர்.

அந்தக் கவிராயர் பெரிதும் மருதகாசியைப் பாராட்டியிருக்கிறார். பாராட்டியதோடு மட்டுமல்லாமல், மருதகாசியைத் தம் தம்பியாகவே வரித்துமிருக்கிறார். “உடுமலையார் மருதகாசிமீது வைத்திருந்த அன்பைப் பார்த்தபொழுது, எங்கே எங்கள் அண்ணனை சுவீகாரப் புத்திரனாக தத்தெடுத்துவிடுவாரோ” என்று தாங்கள் அஞ்சியதாக மருதாசியின் இளைய சகோதரர் முத்தையன் தம்முடைய “அ.மருதகாசி திரையுலகச் சாதனைகள்” நூலில் எழுதியிருக்கிறார். அந்நூலில், நான் சொல்ல நினைத்த சம்பவத்தை முத்தையனும் குறிப்பிட்டிருக்கிறார்.

கவிராயராலேயே அண்ணாந்து பார்க்கப்பட்டவர் எனும் பெருமைக்குரிய மருதகாசி, நட்சத்திரக் கவிஞராக இருந்திருக்கிறார். அவருடைய பாடல் இடம்பெறவேண்டும் என்பதற்காகப் படப்பிடிப்பையே தள்ளிவைக்கவும் ஏ. கே. வேலன் போன்றோர் எண்ணியிருக்கின்றனர். அந்த அளவுக்கு அவர் எழுதும் பாடல்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வந்துள்ளன. அந்தநேரத்தில் அவரே பல திரைநிறுவனங்களுக்கு ஆஸ்தான பாடலாசிரியராகவும் இருந்திருக்கிறார். சேலம் மாடர்ன் தியேட்டர்ஸூக்கும் மருதகாசியே தொடர்ந்து பாடல்கள் எழுதி வந்திருக்கிறார்.

அப்போது அங்கே பணியாற்றிய சிலபேருக்கு, மருதகாசிக்குக் கிடைத்துவரும் அளவற்ற புகழையும் அங்கீகாரத்தையும் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. தங்களால் முடியவில்லை என்றதும், மருதகாசிக்கு எதிராக எவ்வளவோ இடைஞ்சல்களைக் கொடுத்திருக்கின்றனர். ஒருகட்டத்தில் அவர்கள் அந்த காரியத்தில் வெற்றியும் கண்டிருக்கின்றனர். பாடலைத் தவிர, வேறு ஒன்றிலும் கருத்தை வைக்காத மருதகாசிக்கு, தனக்கு எதிராக நடக்கும் காரியங்களைத் தடுக்கவோ தவிடுபொடியாக்கவோ தெரியவில்லை. அமைதியாக இருந்திருக்கிறார். அந்த அமைதியே அவருக்குப் பாதகத்தையும் தந்திருக்கிறது.

தனக்கு ஆகாதவர்கள் கொடுத்துவந்த தொந்தரவிலும் மரியாதைக் குறைச்சலான நடவடிக்கையிலும் மனமுடைந்த அவர், இனி மார்டன் தியேட்டர்ஸூக்கே எழுதுவதில்லை என்னும் முடிவுக்குத் தள்ளப்பட்டிருக்கிறார். அத்துடன் அங்கிருந்து வெளியேறவும் எண்ணியிருக்கிறார். மாடர்ன் தியேட்டர்ஸின் நிறுவனரும் உரிமையாளருமான டி.ஆர். சுந்தரத்திற்கு மருதகாசிமீது அதீத அன்பும் பற்றும் இருந்திருக்கின்றன. ஆனாலும், இடையிலே இருப்பவர்களால் முடியப்பட்ட சிண்டில் அவருங்கூட தப்பிதமான எண்ணத்தை மருதகாசிமீது வைக்க நேர்ந்திருக்கிறது. சென்னையிலுள்ள திரைப்படக் கம்பெனிகளுக்கு மட்டுமே மருதகாசி முக்கியத்துவம் தருவதாகவும் நாமே அழைத்தாலும்கூட, அவர் நம்முடைய கம்பெனியைத் தவிர்ப்பதாகவும் சுந்தரத்திடம் நிர்வாகிகள் கொளுத்திப்போட்டுக் குளிர் காய்ந்திருக்கின்றனர்.

அப்போது, “அலிபாபாவும் நாற்பது திருடர்களும்” எனும் படத்திற்கான முதற்கட்ட வேலைகளை சுந்தரம் ஆரம்பித்திருக்கிறார். மருதகாசிக்குப் பதில் உடுமலை நாராயணகவியை வைத்து பாடல்களை எழுதிவிடலாம் எனவும் திட்டமிட்டிருக்கிறார். அதன்படி, நிர்வாகிகளிடம் உடுமலையைத் தொடர்புகொண்டு குறிப்பிட்ட தேதியில் சேலத்திற்கு வரும்படி அழைக்கச் சொல்லியிருக்கிறார். அவர்களும் அழைத்திருக்கிறார்கள். அழைப்பை ஏற்றுக்கொண்ட உடுமலை, தம்முடன் மருதகாசியும் சேலத்திற்கு வருவாரென்று தெரிவித்ததை நிர்வாகிகள் சுந்தரத்திடம் பகிர்ந்திருக்கிறார்கள். ‘அழைத்தாலும் மருதகாசி வருவதில்லை என்றீர்களே, இப்போதுமட்டும் எப்படி வருவார்’ என்று அவரும் அவர்களைக் கேட்காமல் இல்லை.

குட்டு வெளிப்பட்டுப்போன நிர்வாகிகள், பதில் சொல்லமுடியாமல் திணறியிருக்கின்றனர். சொன்னதுபோலவே மருதகாசியை அழைத்துக்கொண்டு போன உடுமலை, மொத்தமுள்ள பத்துப் பாடல்களில் ஒன்பது பாடல்களை மருதகாசி எழுதட்டுமென்றும், ஒரே ஒரு பாடலை மட்டும் தான் எழுதித் தருகிறேன் என்றும் சொல்லியிருக்கிறார். முழுப் பாடல்களையும் உடுமலையை வைத்து எழுதலாம் என்றே அவர்கள் எண்ணியிருந்தது.

அதுமட்டுமல்ல, இந்தியில் வெளிவந்த படத்தையே தமிழிலும் எடுப்பதால் இந்தி மெட்டுக்களையே பயன்படுத்திக்கொள்ளலாம் என்பதுதான் சுந்தரத்தின் யோசனை. ஆனால், உடுமலையாரின் பேச்சுக்கு அக்காலத்தில் மறுப்பு சொல்லும் தைரியம் யாருக்கும் இருந்ததில்லை. எனவே, அவர் சொன்னதுபோலவே ஒன்பது பாடல்களை மருதகாசி எழுதிட நிர்வாகம் சம்மதித்திருக்கிறது. ஒரே ஒரு பாடலை மட்டும் உடுமலையார் எழுதியிருக்கிறார். அந்த ஒரு பாடலும் திரையில் இடம்பெறாததால், அனைத்துப் பாடல்களையும் எழுதிய பெருமை மருதகாசியைச் சேர்ந்திருக்கிறது.

பாடல்களுக்கான தொகையையும் உடுமலையே பேசியிருக்கிறார். அதன்படி தரப்பட்ட ஊதியத்தை அப்படியே மருதகாசிக்கு தந்துவிட்டு, ஒரே ஒரு பாடலுக்கான பணத்தை மட்டும் பெற்றிருக்கிறார். அதையும் மருதகாசியிடமே பெற்றுக்கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு கவிஞன் இன்னொரு கவிஞனின் திறமைமீது வைத்திருந்த மதிப்பையும் மாண்பையும் காட்டக்கூடிய இந்தச் சம்பவத்தை அறிந்தபிறகும் கவிஞர்கள் ஒருவருக்கொருவர் அடித்துக்கொள்வர் என்றுதான் சொல்லப் போகிறோமா? மாடர்ன் தியேட்டர்ஸூடன் மருதகாசிக்கு இருந்த பிணக்கையும் சரிபண்ணி, ஒரு நல்ல கவிஞனின் வளர்ச்சிக்கு உதவிய உடுமலையை எத்தனை பேருக்கு இன்று நினைவிலிருக்கிறது? அடுத்தவரின் வாய்ப்பு தன்னை நோக்கி வருகின்றபோது, அதை யாருக்கும் தெரியாமல் பயன்படுத்தி முன்னேறிவிடும் முனைப்பை உடுமலை போன்றவர்கள் உதறிவிடுகின்றனர். தன்னை வளர்த்த உடுமலையாரைப் பற்றி “என்னுடைய இரண்டாயிரம் பாடலும் கவிராயரின் இரண்டு பாடலுக்கு சமமாகாது” என்று மருதகாசி ஒரு நேர்காணலில் கூறியிருக்கிறார்.

சமகாலத்தில் ஒரு துறையில் பணிபுரிந்த இருவர், தங்களுக்குள் போட்டியோ பொறாமையோ கொள்ளாமல், ஒருவர் தகுதிமீது இன்னொருவர் காட்டிய அக்கறை வியக்க வைக்கிறது. அன்பையும் அக்கறையையும்விட, வாய்ப்புகளோ வசதிகளோ பெரிதில்லை என்னும் எண்ணம் அவர்களுக்கு இருந்திருக்கிறது. உடுமலை, பெரும்பாலும் மெட்டுக்குப் பாட்டெழுத பிரியப்படாதவர். ஆகவேதான், மெட்டுக்கு வேகமாக எழுதும் மருதகாசிக்கு சிபாரிசு செய்திருக்கிறார் எனக் குதர்க்கம் கற்பிப்பவர்களுக்கு என்னிடம் பதிலில்லை.

அப்படி ஒரு சூழல் வந்திருக்குமேயானால், அவ்வாய்ப்பை அவர் தட்டிக் கழித்திருக்கலாம். என்னை விட்டுவிடுங்கள் என்றோ எனக்கு வேலை அதிகமாக இருக்கிறது என்றோ நாகரிகமாக நழுவியிருக்கலாம். அதையெல்லாம் செய்யாமல், மருதகாசியை அழைத்துக்கொண்டுபோய், அவருக்கு அந்நிறுவனத்துடன் இருந்த உறவைப் புதுப்பித்து தரவேண்டிய கட்டாயம் அவருக்கில்லையே. அந்த இடத்தில்தான் உடுமலைக்கு மருதகாசியிடம் இருந்த அன்பை அறியமுடிகிறது.

கொடுக்கப்பட்ட சந்தங்களுக்குள் சொற்களையும் கருத்துகளையும் எழுதும் நிர்பந்தத்தை அவர் ஒருபொழுதும் விரும்பாமல் இருந்திருக்கலாம். சுதந்திரமாக எழுதுவதையே தனது கொள்கையாகவும் வரித்திருக்கலாம். அதையும்மீறி அவர் மருதகாசியின் வளர்ச்சியில் பங்காற்றியிருக்கிறார் என்பதே நான் சொல்ல வருவது. உடுமலையைப் பாரதிதாசனுக்கு நிகராக பெரியார் பார்த்திருக்கிறார். திரைக்கவிஞர்கள் மூலமும் தான் முன்வைக்கும் கருத்துகள் மக்களிடம் சேரவேண்டுமென நினைத்திருக்கிறார். உடுமலை, பலவிஷயங்களில் திராவிடக் கருத்தியலை திரைப்பாடல்களில் பதிவு செய்திருக்கிறார். மருதகாசிக்கு திராவிடக் கருத்தியலைவிடவும் தமிழ்த் தேசிய கொள்கைகள்மீதே பற்றிருந்தன. கொள்கைகளால் இருவரும் வெவ்வேறு திசையில் பயணித்தவர்கள். எனினும், அன்பைப் பரிமாறிக்கொள்வதில் அவர்களிடையே ஒருகுழப்பமும் இருக்கவில்லை. சக கவிஞர்கள் மீது மட்டுமல்ல, தனக்கு பின்னே வந்த கவிஞர்களையும் அடையாளங்கண்டு அவர்கள் வளர்ச்சிக்கு உதவிய பெருமை மருதகாசிக்கும் உண்டு.

உடுமலை எப்படித் தம்மிடம் நடந்துகொண்டாரோ அதைப்போலவே பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்திடமும் வாலியிடமும் மருதகாசி நடந்திருக்கிறார். அதே சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ், “பாசவலை” திரைப்படத்தைத் தயாரித்தபோது, அப்படத்திற்குத் தம்மைப் பாட்டெழுத அழைத்தவர்களிடம் “என்னைவிடவும் சிறப்பாக எழுதக்கூடிய என் தம்பி, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தை அனுப்பிவைக்கிறேன்” என்றிருக்கிறார். “பாரதிதாசனின் பட்டறையில் உருவானவன் என்றும் உங்கள் தேவையைப் பூர்த்தி செய்வான்” என்றும் கூறியிருக்கிறார். மருதகாசியின் சிபாரிசில் மாடர்ன் தியேட்டர்ஸ் போன பட்டுக்கோட்டை, முதல் கல்லையே பலமாக வீசியதை நாமறிவோம்.

அந்தப் பாடல்தான் “குட்டி ஆடு தப்பிவந்தா / குள்ளநரிக்குச் சொந்தம்” என்பது. அந்த ஒற்றைப் பாடலிலேயே தன்னை யாரென்று நிரூபித்து திரைத்துறையின் கயிற்றைப் பற்றி மேலேறியிருக்கிறார் பட்டுக்கோட்டை. அதேபோல, அறிஞர் அண்ணா வசனமெழுதி ப. நீலகண்டன் இயக்கிய “நல்லவன் வாழ்வான்” திரைப்படத்தில் ஒரு சம்பவம். எம். ஜி. ஆர். நடிப்பில் வெளிவந்த அப்படத்திற்கு டி. ஆர். பாப்பா இசையமைத்திருக்கிறார்.

“சிரிக்கின்றாள் அவள் சிரிக்கின்றாள்” என ஆரம்பிக்கும் பாடல் வாலி பெயரில் வந்திருக்கிறது. ஆனால், அப்பாடல் உருவாக்கத்தின்போது எத்தனையோ இடர்பாடுகளை வாலி சந்தித்திருக்கிறார். மெட்டு சரியில்லையென்று ஒருமுறையும் பாடியவிதம் சரியில்லையென்று மற்றொருமுறையும் பாடலை மாற்றிக்கொண்டே இருந்திருக்கின்றனர். ஒவ்வொரு மாற்றத்தையும் செய்து பார்த்துவிட்டு இறுதியில், வரிகள் சரியில்லை என்றும் பாடல் எழுதிய வாலி கைராசியில்லாதவர் என்றும் சொல்லியிருக்கின்றனர். அப்படிச் சொல்லுவதற்கு பிள்ளையார்சுழி போட்டவர் எம்.ஜி.ஆர் என்பது, எந்த அளவுக்கு உண்மையோ எனக்குத் தெரியாது. கைராசியில்லாத வாலிக்கு பதில் மருதகாசியை வைத்து எழுதும் யோசனையையும் அவரே தந்ததாக தகவல்கள் சொல்கின்றன.

நல்லவான் வாழ்வான் திரைப்படக் குழுவை ஏற்கெனவே மருதகாசிக்குத் தெரியுமென்பதால் அழைத்தவுடன் போயிருக்கிறார். அதுவரை, மருதகாசிக்கு நடந்தது எதுவுமே தெரிந்திருக்கவில்லை. போன பிறகுதான் எல்லாவற்றையும் சொல்லியிருக்கிறார்கள். விவரமறிந்ததும் வாலி எழுதிய வரிகளை வாங்கி மருதகாசி படித்திருக்கிறார். அவருக்கு அவ்வரிகளில் பிழையிருப்பதாகப் படவில்லை. தவிரவும், தான் எழுதுவதால் ஒரு புதுக்கவிஞன் வாழ்க்கை பறிக்கப்படுமென்று எழுதத் தயங்கியிருக்கிறார். அத்துடன், வாலி கைராசியில்லாதவர் எனும்பொய் வதந்தியாக பரவிவிடுமே எனவும் கலங்கியிருக்கிறார். நிறுவனத்திடமும் எம்.ஜி.ஆரிடமும் வாலிக்காக பரிந்துபேசி, வாலி எழுதிய வரிகளே திரையில் வரும்படி செய்திருக்கிறார். அதுவரை வாலியை மருதகாசி நேரில் பார்த்ததில்லை.

முகமறியாத ஒருவருக்காக தனக்குவந்த பாடல் வாய்ப்பையும் விட்டுத்தர மருதகாசியால் முடிந்திருக்கிறது. படைப்புக்கும் மேலானதே படைப்பாளியின் மனம். இத்தனை ஆண்டுக்காலமாக திரைப்பாடலின் நீள அகலத்தை விவாதிப்பவர்களுக்கு, திரைப்பாடலாசிரியர்களின் பக்குவ மனத்தை உணர்ந்துகொள்ள முடியாமல் போயிருப்பது விந்தையிலும் விந்தை. ஒரு பாடலை குறிப்பிட்ட கவிஞரே எழுதியிருக்கிறார் என்பதைக்கூட தெரிந்துகொள்ளாத அவர்கள், திரைப்பாடல்கள் குறித்து எழுதுவதும் விமர்சனங்களை முன்வைப்பதும் வேதனையளிக்கின்றன.

மருதகாசி, மரபிலக்கியச் சாயல்களையும் தமிழ் மண்ணின் கலாச்சாரப் பெருமிதங்களையும் திரைப்பாடல்களில் கொண்டுவந்தவர். கண்ணதாசனுக்கு முன்பே அதிகத் திரைப்பாடல்கள் எழுதியவராக அறியப்படும் அவர், திருச்சியை அடுத்த மேலக்குடிகாடு கிராமத்தைச் சேர்ந்தவர். பாபநாசம் சிவனின் சகோதரரும் பாடலாசிரியருமான ராஜகோபால அய்யரிடம் உதவியாளராக இருந்த அனுபவமும் அவர்க்குண்டு. அருணாச்சலக் கவிராயரின் படைப்புகளில் உந்தப்பட்டு எழுதத்தொடங்கிய மருதகாசி, கல்லூரிக் காலத்திலேயே நாடகங்களுக்குப் பாட்டெழுதிப் பழகியிருக்கிறார்.

திருச்சி லோகநாதனின் இசையமைப்பில் வெளிவந்த அவருடைய நாடகப்பாடல்கள் அக்காலத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. அரு. ராமநாதனின் வானவில் நாடகத்திற்கு மருதகாசி எழுதிய ஒரு பாடல், மாடர்ன் தியேட்டர்ஸ் டி. ஆர். சுந்தரத்திற்குப் பிடித்துப்போக, திரைத்துறைக்குள் நுழையும் வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. அதேபோல, வேறொரு நாடகத்திற்கு பாட்டெழுதி, சுந்தரத்தைக் கவர்ந்திருந்த கவி. கா.மு. செரீபும் மாடர்ன் தியேட்டர்ஸூக்கு ஏககாலத்தில் வரவழைக்கப்பட்டிருக்கிறார்.

இரண்டுபேரும் ஒன்றாக இணைந்து பணிபுரிவதற்கு முன்பே ஒருவரை ஒருவர் அறிந்திருக்கின்றனர். ஒருவரைப் பற்றி இன்னொருவருக்கு உயர்ந்த மதிப்பும் இருந்திருக்கிறது. மதிப்பை வெளிப்படுத்தும்விதமாகவே அவர்கள் இருவரும் இணைந்து பாடல்களை எழுத எண்ணியிருக்கிறார்கள். இரட்டைப் பாடலாசிரியர்களாக “மாயாவதி” திரைப்படத்தில் அறிமுகமான அவர்கள், அந்த உறவைத் தமிழரசுக் கழகச் செயல்பாட்டிலும் காட்டியிருப்பது கவனிக்கத்தக்கது.

எத்தனை சிக்கலான மெட்டைக் கொடுத்தாலும், அம்மெட்டுக்கு உரிய வார்த்தைகளை இடும்கலையில் மருதகாசி தனித்துத் தெரிந்திருக்கிறார். இந்தி மெட்டுக்கும் தெலுங்கு மெட்டுக்கும் அவர் பாடல்களை எழுதினாலும், அப்பாடல்கள் அசலான தமிழ்ப்பாடல்களைப்போலவே அமைந்திருக்கின்றன. அருணா பிலிம்ஸ் “ராஜாம்பாள்” திரைப்படத்தைத் தொடர்ந்து, தமிழ், தெலுங்கு ஆகிய இருமொழிகளிலும் “குமாஸ்தா” திரைப்படத்தை ஆரம்பித்திருக்கின்றனர். தெலுங்கில் பாடல்கள் எழுத புகழ்பெற்ற ஆச்சார்யா ஆத்ரேயாவும் தமிழில் எழுத மருதகாசியும் ஒப்பந்தமாயிருக்கின்றனர். தெலுங்கில் வரக்கூடிய பாடலின் பொருளை உள்வாங்கி தமிழில் எழுதவேண்டும் எனவும் சொல்லியிருக்கின்றனர். அதன்படி, ஆத்ரேயா “மன அதக்குல இந்தே பிரதுக்குல / பொந்தே ஆசலுபேக்கலமேடே” என்று எழுதியிருக்கிறார். நம்முடைய மனக்கோட்டைகள் சீட்டுக்கட்டுகளால் அடுக்கப்பட்ட வீடுகள் போன்றதே என்பதுதான் ஆத்ரேயா எழுதிய வரிகளுக்கான அர்த்தம்.

அந்த வரிகளை மனதில் நிறுத்திக்கொண்டு “நம் ஜீவியக் கூடு / களிமண் ஓடு / ஆசையோ மணல்வீடு” என்று அதே சந்தத்திற்கு அதே அர்த்தம் வரும்படி மருதகாசி எழுதியிருக்கிறார். வரிகளைக் கேட்டறிந்த ஆத்ரேயாவே தன்னைவிடவும் சிறப்பாகச் சிந்தித்த மருதகாசியை ஆரத்தழுவிப் பாராட்டியிருக்கிறார். பாராட்டு முடிந்த கொஞ்ச நேரத்திலேயே இடிபோல் ஒரு செய்தி மருதகாசிக்கு வருகிறது. தம்முடைய தம்பிகளில் ஒருவரான கோவிந்தசாமி மரணமுற்ற செய்திதான் அது. “ஜீவியக் கூடு, களிமண் ஓடு” என்றெழுதி முடித்த அந்தத் தருணத்தில், அப்படியொரு செய்தியைக் கேட்ட மருதகாசி, படைப்புகளின் சூட்சுமத்தை எண்ணிப் பதறிப்போயிருக்கிறார். இயற்கையோ இறைவனோ ஏதோ ஒன்றைப் பற்றினாலன்றி, இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதிலில்லை எனவும் எண்ணியிருக்கிறார். அவருக்கான வாய்ப்புகள் முழுக்க முழுக்க அவருடைய தனிப்பட்ட ஆற்றல்களால் மட்டுமே கிடைத்திருக்கின்றன.

ஒருமுறை எம். கே. டி. பாகவதரின் “புதுவாழ்வு” படத்திற்கு பாடல் எழுத மருதகாசியை ஜி.ராமநாதன், கலைவாணர் என். எஸ். கே. விடம் அழைத்துப் போயிருக்கிறார். சிங்கனும் சிங்கியும் பாடுவதாக அமைக்கவேண்டிய நகைச்சுவைப் பாடல் குறித்து கலைவாணரும் விளக்கியிருக்கிறார். விளக்கிவிட்டு, “இதுவரை என்னுடைய படங்களுக்கு உடுமலையும்

கே.பி. காமாட்சி சுந்தரமும்தான் எழுதியிருக்கிறார்கள். அவர்கள் அளவுக்கு நீங்கள் எழுதவில்லை என்றால் பாடலைப் பயன்படுத்த மாட்டேன்” எனவும் எச்சரித்திருக்கிறார். வாய்ப்பு இராமநாதனால் வந்திருந்தாலும், அதை தக்கவைக்கும் சவாலை மருதகாசி தயங்காமல் ஏற்றிருக்கிறார். “சீனத்து ரவிக்கை மேலே” என்று ஆரம்பிக்கும் அந்தப்பாடல் கலைவாணவரை வெகுவாக கவர்ந்திருக்கிறது. குற்றாலக் குறவஞ்சியின் பாதிப்பில் எழுதப்பட்ட அப்பாடல், நாடக பாணியில் அமைந்த நாட்டார் பாடல் வகையை ஒத்திருக்கிறது.

சிங்கனும் சிங்கியும் உரையாடுவது போன்ற அப்பாடலில், சிங்கிமீது சிங்கனுக்கு ஏற்படும் சந்தேகத்தை தெளிவுபடுத்துவதாகப் பாடலின் போக்கு அமைந்திருக்கும். கலைவாணரின் எதிர்பார்ப்பை நூறு சதவீதம் பூர்த்திசெய்த அந்தப்பாடல், ஏதேதோ காரணத்தால் சம்பந்தப்பட்ட படத்தில் பயன்படுத்த முடியாமல் போக, அதன்பின் வெளிவந்த “முல்லைவனம்” படத்தில் வெளிவந்திருக்கிறது. அதன்மூலம், தொடர்ந்து கலைவாணரின் படங்களுக்கு எழுதும் கவிஞர்களில் ஒருவராக மருதகாசியும் அறியப்பட்டிருக்கிறார்.

“சிந்திக்கத் தெரிந்த மனிதகுலத்துக்கே சொந்தமானது சிரிப்பு” எனத் தொடங்கும் “ராஜாராணி” பட வாய்ப்பும் அவருக்கு அப்படித்தான் வந்திருக்கிறது. ஒரு வார காலத்திற்கும் மேலாக உடுமலையார் எழுதியும் சரியாக வரவில்லையென்று மருதகாசியிடம் அப்பாடலை கலைவாணர் ஒப்படைத்திருக்கிறார். ஒப்படைத்த மறுநாளே பாடல் முழுவதையும் எழுதி பாராட்டு பெற்ற கதையையெல்லாம், மருதகாசி தமது “திரைப்படப் பாடல்கள்” நூலில் தெரிவித்திருக்கிறார். சங்கீதச் சிரிப்பு என்று பாடலை முடித்ததற்கு ஏற்ப, கலைவாணர் இரண்டு ஆவர்த்தனத்தை குறைத்து, ஒரு ஆவர்த்தனமாகக் குறுக்கிப் பாடியிருக்கும் அழகையும் அந்நூலில் விவரித்திருக்கிறார்.

“திருநாடு தன்னில் திருவோடு ஏந்தி / தெருவோடு போகும் நிலை மாறிடாது / சீமான்கள் உள்ளம் மாறாதபோது” என்னும் “கனவு” திரைப்படப் பாடலை அண்ணா பாராட்டியிருக்கிறார். அதுமட்டுமல்ல, “இன்னொருவர் தயவெதற்கு / இந்நாட்டில் வாழ்வதற்கு / இல்லையென்ற குறையும் இங்கே / இனிமேல் ஏன் நமக்கு” என்று ‘தங்கரத்தினம்’ படத்தில் எஸ்.எஸ். ராஜேந்திரனுக்காக மருதகாசி எழுதிய வரிகளைப் புகழ்ந்து, ஐந்து பக்கங்களுக்கு அண்ணா ஒரு கட்டுரையே எழுதியிருக்கிறார். “திராவிட நாடு” பத்திரிகையில் அக்கட்டுரை வெளிவந்த சமயத்தில் மருதகாசியைத் திராவிட இயக்கத் தோழர்கள் தங்களில் ஒருவராகவே கருதியிருக்கின்றனர். கழக மாச்சர்யங்களைக் கடந்தும் ஒரு கவிஞனின் வார்த்தையைப் புகழ்ந்த அண்ணா, பல விஷயங்களில் முன்மாதிரியை தம் தம்பிகளுக்குக் காட்டியிருக்கிறார்.

கருணாநிதியும் எம்.ஜி.ஆ.ரும் திராவிட இயக்கக் கலைஞர்களாகத் தங்களை அடையாளப்படுத்தி, திரைத்துறையில் வேகமாக வளர்ந்த காலத்தில் அவர்கள்கூடவே கண்ணதாசனும் வளர்ந்திருக்கிறார். அல்லது அவர்கள் இருவராலும் வளர்க்கப்பட்டிருக்கிறார். திறமை ஒருபுறமிருந்தாலும், தோழமையும் கண்ணதாசனைத் தோளில்தூக்கி சுமந்திருப்பதை மறுப்பதற்கில்லை. பட்டுக்கோட்டையாரின் மறைவுவரை மிதமாக இருந்த அவர் வளர்ச்சி, அதன்பின் பெரும்வேகமெடுத்து பிரளயத்தையே உண்டு பண்ணியிருக்கிறது. எம். ஜி. ஆரின் படங்களுக்குப் பாடல்கள் எழுதிவந்த மருதகாசி ஒரு கட்டத்தில், திரைத்துறையைவிட்டே இரண்டுமூன்று ஆண்டுகள் ஒதுங்கி இருந்திருக்கிறார்.

1963முதல் 1967வரை திரைத்துறைத் தொடர்பே இல்லாத நிலைக்குத் தம்மைத் தாமே துண்டித்துக்கொண்டிருக்கிறார். நண்பர்கள் சொன்னார்களென்று திரைப்படத் தயாரிப்பில் ஈடுபட்டு, கடனுக்கும் அளவில்லாத மன உளைச்சலுக்கும் ஆளான அவரை, மீண்டும் திரைத்துறைக்கு அழைத்துவர பலரும் முயன்றிருக்கிறார்கள். நெருங்கிய நண்பர்களாலும் கைவிடப்பட்ட மருதாசிக்கு அப்போதும் ஆறுதல் வழங்கி ஆற்றுப்படுத்தியவர் உடுமலையேயென அறிகிறோம். ஈட்டிய செல்வமெல்லாம் போனதுபற்றிக்கூட அவருக்கு வருத்தமில்லை. நம்பியவர்கள் செய்த மோசத்தை எண்ணியே குமைந்திருக்கிறார். அதனால், திரைத்துறைமீது அக்காலத்தில் அவருக்கு ஒருவித கசப்பும் வெறுப்பும் ஏற்பட்டுப்போய், சொந்த கிராமத்திலேயே தங்கிவிடவும் எண்ணியிருக்கிறார்.

திறமைமிக்கவர்களைத் திரைத்துறை கண்காணித்துக் கொண்டே இருக்கும். அவர்களே விலகிவிடுவதாக அறிவித்தாலும் விட்டுவிடாது. விட்ட இடத்தைப் பிடிக்கவேண்டுமென மருதகாசி நினைக்கவில்லை. தனக்கு இடமோ படமோ வேண்டாமென்றுதான் ஒதுங்கியிருக்கிறார். ஆற்றல்மிக்க ஒருவர் அப்படி இருப்பதை யார்தான் பொறுத்துக்கொள்வர். விடாப்பிடியாக அவரை அழைத்துவந்து, தேவர் தாம் தயாரித்த மறுபிறவியில் எழுத வைத்திருக்கிறார். 1967இல் எம். ஜி. ஆர். குண்டடிபட்டு குணமடைந்த சமயம் அது. “மறுபிறவி” என்கிற தலைப்பே அதற்காக வைக்கப்பட்டதுதான். எம். ஜி. ஆருக்கு மட்டுமல்ல, மருதகாசிக்கும் அது மறுபிறவியாக இருக்குமென்றே தேவர் நம்பியிருக்கிறார். ஆனாலும், ஒரே பாடலுடன் அந்தத் திரைப்படம் நிறுத்தப்பட்டிருக்கிறது.

அதன் பிறகு “தேர்த் திருவிழா, விவசாயி” முதலிய படங்களுக்கு மருதகாசி எழுதிய பாடல்கள், அவரை மீண்டும் பழைய இடத்திற்கு கொண்டுவந்து சேர்த்திருக்கின்றன. காலமே கைமாற்ற நினைத்தாலும் ஒருவருடைய இடம், அவரிடமே இருக்குமென்பதுதான் உண்மை. ஒருவரை ஒருவர் கடந்துசெல்லலாம். ஆனால், ஒருவர் இடத்தை இன்னொருவர் பறித்துவிட வழியில்லை. ஆழ்ந்த இலக்கியப் பரிச்சயமுடைய ஒருவர், ஓரிரு வரிகளிலேயே தன்னை உணர்த்திவிடுவார். தம்முடைய எழுத்தாற்றலை வெளிப்படுத்த அவருக்குப் பத்துப் பதினைந்து வாய்ப்புகள் தேவைப்படுவதில்லை. ஓரே ஒரு பாடல் போதும். “நினைத்ததை முடிப்பவன்” திரைப்படத்தில் இரண்டு பாடல்கள் முடிந்திருந்த நிலையில், அந்தப் பாடல்களில் முழுத் திருப்தியடையாத எம். ஜி. ஆர்., மருதகாசியை அழைத்திருக்கிறார்.

“நான் பொறந்த சீமையிலே நாலுகோடி பேருங்க / அந்த நாலுகோடி பேரிலே நானும் ஒரு ஆளுங்க” என எழுதியிருந்த கண்ணதாசனின் வரிகளில் அவருக்குப் பிடித்தமில்லை. “எனக்காக தனித்துவமாக அப்பாடல் எழுதப்படவில்லையே” என்றிருக்கிறார். மருதகாசியோ “வரிகள் இயல்பாகவும் அழகாகவும்தானே இருக்கிறது” என்று எம்.ஜி.ஆரிடம் கண்ணதாசனுக்காக வாதிட்டிருக்கிறார். அதற்கு, எம். ஜி.ஆர்., “நாலுகோடி பேர் என்பதைவிட, ஆயிரத்தில் ஒருவன் என்பதுபோல் இருந்தால் நன்றாயிருக்குமென” சொல்லியிருக்கிறார். இரண்டுமே எண்ணிக்கைதான். என்றாலும், மக்களிடத்திலே தனக்குள்ள நெருக்கத்தை வெளிப்படுத்தும் வரிகளே தேவை என்று எம்.ஜி.ஆர். விரும்பியிருக்கிறார்.

மருதகாசிக்கும் எம். ஜி.ஆர். எண்ணுவதிலுள்ள நியாயத்தை புரிந்துகொள்ள முடிந்திருக்கிறது. அதன்பின் அமைக்கப்பட்ட மெட்டிற்கேற்ப “கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும்” பாடலை எழுதிக் கொடுத்திருக்கிறார். அப்பாடலில் இரண்டாவது சரணத்தை “பொன் பொருளைக் கண்டவுடன் / வந்தவழி மறந்துவிட்டு / தன் வழியே போகட்டுமே” என்று மருதகாசி எழுதியிருக்கிறார். எழுதப்பட்ட சரணத்தை வாசித்த எம்.ஜி.ஆர்., “பொன் பொருளைக் கண்டவுடன் வந்த வழி போவதில் தப்பில்லையே” எனக் கேட்டிருக்கிறார். தவிர, “தன்வழி, நல்வழி என்று நினைப்பவர்கள் அப்படித்தானே போவார்கள்” என்றும் கேட்டிருக்கிறார். அப்படியொரு கேள்வியை எம்.ஜி.ஆர். கேட்டதும் “பொன் பொருளைக் கண்டவுடன் / வந்தவழி மறந்துவிட்டு / கண்மூடிப் போகிறவர் போகட்டுமே” எனத் திருத்தித் தந்திருக்கிறார்.

ஒரு பாடலை எழுதக்கூடியவர் என்ன அர்த்தத்தில் எழுதினாலும் அதைத் தனக்கேற்ப பொருத்திக்கொள்ளாமல், தனக்காக எழுதவைத்து தன் இருப்பையும் இயல்பையும் மக்களுக்குச் சொல்லிக்கொண்டே இருந்தவர் எம். ஜி. ஆர். மட்டுமே. ஒரு பாடலைப் பெற மாதக் கணக்கில் அவர் காத்திருந்த கதைகள் எல்லோரும் அறிந்ததுதான். நானறிய, நடிகர்களில் திரைப்பாடல்களின் செல்வாக்கை உணர்ந்தவர்கள் இரண்டு பேர். ஒருவர், கலைவாணர். மற்றொருவர் எம்.ஜி.ஆர். இரண்டுபேரும்தான் தங்கள் அடையாளமாகப் பாடல்களைக் கருதியவர்கள். பாடல்கள் மட்டுமே தங்களை மக்களிடம் கொண்டுசேர்க்கும் என்று தீவிரமாக நம்பியவர்கள். மற்றவர்களுக்குப் பாடல்களின் சக்தி புரிந்திருந்தது. ஆனாலும், அதை அவர்கள் கதையை நகர்த்தும் கருவியென்றே எண்ணினர். சமூகத்தில் ஒரு பாடல் எழுப்பும் அதிர்வைப் பற்றி அவர்களால் ஊகிக்க முடியவில்லை.

திராவிட இயக்கத்தின் பேச்சையும் எழுத்தையும் தன் தனிப்பட்ட வாழ்வின் உயர்வுக்கும் ஸ்தானத்திற்கும் உபயோகிக்க எம்.ஜி.ஆருக்குத் தெரிந்திருக்கிறது. அந்தவிஷயத்தில் கலைவாணரை விடவும் ஒருபடி எம்.ஜி.ஆர். மேலே நிற்கிறார் என்றுதான் சொல்லவேண்டும். மருதகாசியின் பல திரைப்பாடல்கள் எம்.ஜி.ஆரைத் திரைக்கு வெளியேயும் நாயகனாகக் காட்டவே எழுதப்பட்டுள்ளன. கலைவாணரின் “தீனா மூனா கானா” என்றொரு பாடல், கலைஞர் கதை வசனத்தில் உருவான ‘பணம்’ திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கிறது. பெரியாரிடமிருந்து கருத்து வேறுபட்ட அண்ணா, தம் தம்பிகளுடன் இணைந்து திராவிட முன்னேற்றக்கழகத்தை ஆரம்பிக்கிறார். அப்படி ஆரம்பித்த கட்சிக்கு நிபந்தனையற்ற ஆதரவைக் கலைத்துறையிலிருந்து நல்கியவர்களில் கலைவாணர் முக்கியமானவர்.

எந்த அளவுக்கு அண்ணாவையும் திராவிட முன்னேற்றக் கழகத்தையும் அவர் ஆதரித்திருக்கிறார் என்றால், பாடலின் தலைப்பிலேயே கட்சிப் பெயரை உணர்த்தும் அளவுக்கு. தணிக்கைத்துறை அவ்வரிகளை அனுமதிக்காதென்று அவருக்குத் தெரிந்தே இருந்தது. ஆனாலும், தீனா மூனா கானா என்பதற்கு “திருக்குறள் முன்னேற்றக் கழகம்” என்று புது விளக்கத்தையும் கலைவாணர் அப்பாடலில் சொல்லியிருப்பார். எழுதச் சொன்ன கலைவாணருக்கும் எழுதிய கண்ணதாசனுக்கும் தெரிந்தது, மக்களுக்குத் தெரியாதா என்ன? என்ன நோக்கத்திற்காக அப்பாடல் எழுதப்பட்டதோ அந்தப் நோக்கத்தை அப்பாடல் பூர்த்தி செய்திருக்கிறது. பாடலின் இறுதியில் “மேடையில் முழங்கு அறிஞர் அண்ணாபோல்” என்ற வரியைத் தணிக்கைத்துறை அனுமதிக்கவில்லை.

அதற்குப் பதிலாக “மேடையில் முழங்கு திரு.வி. க.போல்” என்று மாற்றியிருப்பதை அறியலாம். காலத்தின் சுழற்சியில் அண்ணாவின் பெயர் வேண்டாமென்று மாற்றச் சொன்னவர்கள், அதே அண்ணாவின் ஆணைக்குக் கீழே வேலை செய்யவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது நகைமுரணல்லாமல் வேறென்ன?

இதையெல்லாம் அருகிருந்து கவனித்து, பாடம் படித்துக்கொண்டவர் எம்.ஜி.ஆர். என்பதால் பாடல்களை அவர் எளிய விஷயமாக எண்ணவே இல்லை. தீனா மூனா கானா பாடலுக்கு எதிராகவும் ஒரு பாடல் “மாங்கல்யம்” திரைப்படத்தில் வந்திருக்கிறது. அதை எழுதியிருப்பவர் மருதகாசி. திராவிட இயக்க எதிர்ப்பில் வளர்ந்த தமிழரசுக் கழகத்தினர் பலரும் சம்பந்தப்பட்ட அப்படத்தில் “வானா மூனா கானா” என்றொரு பாடல். அப்பட்டமான திராவிட முன்னேற்றக் கழக எதிர்ப்பு பிரச்சாரமே அப்பாடல். மாங்கல்யம் திரைப்படத்தை இயக்கிய ஏ. பி. நாகராஜனும் பாடலை எழுதிய மருதகாசியும் வரிந்துகட்டி அப்பாடலில் திராவிட இயக்கத்தை வசைபாடி இருக்கிறார்கள். ‘கூஜா கூஜா கூஜா’ என்றெல்லாம் முதலில் போட்டு, தங்களின் ஒட்டுமொத்த ஆதங்கத்தையும் அதில் கொட்டியிருக்கின்றனர். நிஜத்தில் அப்பாடல் எழுத காரணமாயிருந்தவர் கண்ணதாசனே. ஒருமுறை கண்ணதாசனும் மருதகாசியும் ரயிலில் ஒன்றாகப் பயணித்திருக்கின்றனர்.

அப்போது, ஒரு பாடகியும் அவர் கணவரும் தயாரிப்பாளர்களுக்குக் கொடுத்துவந்த தொல்லையைப் பற்றி பேச்சு எழுந்திருக்கிறது. உடனே, ஒரு பச்சை வண்ணப் பேனாவை மருதகாசியிடம் கொடுத்து ‘அந்தப் பாடகியையும் அவர் கணவரையும் பச்சை பச்சையாக ஒரு பாடல் எழுதுங்கண்ணே’ என்றிருக்கிறார். கண்ணதாசனின் வேண்டுகோளுக்காக அந்தப் பயணத்தில் எழுதிய அந்தப்பாடல்தான் பின்னாளில் மாங்கல்யம் திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. கண்ணதாசனால் தூண்டப்பட்டு எழுதிய பாடல், கண்ணதாசன் எழுதிய தீனா மூனா கானா பாடலுக்கு எதிராக வெளிவருமென்று இருவருமே கருதியிருக்க வாய்ப்பில்லை.

கண்ணதாசன்மீதும் மருதகாசிக்கு அளவில்லாத அன்பிருந்திருக்கிறது. சிவாஜி கணேசனுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த மருதகாசி, கண்ணதாசனுக்காக அவரைச் சந்திப்பதையே தவிர்த்திருக்கிறார். 1962இல் பந்தபாசம் திரைப்படத்தை சிவாஜி தயாரித்தபோது, அப்படத்திற்கு கண்ணதாசனே பாடல் எழுத ஒப்பந்தமாகியிருக்கிறார். ஓரிரு பாடல்கள் முடிவடைந்த நிலையில் கண்ணதாசனுக்கும் தயாரிப்பு நிர்வாகிகளுக்குமிடையே ஏதோ பிரச்சனை எழுந்திருக்கிறது. அப்போது சிவாஜி வெளிநாட்டில் இருந்திருக்கிறார். பிரச்சனை குறித்துத் தெரிந்துகொண்ட அவர், மருதகாசியை அழைத்துப் பாடல்களை முடியுங்கள் என்று தொலைபேசியில் தெரிவித்திருக்கிறார். அவர்களும் அவ்விதமே மருதகாசியை அழைத்திருக்கிறார்கள். ஆனாலும், மருதகாசி எழுதாமல் தவிர்த்துவிட்டு, ஊரில் இல்லையென்று சொல்லியிருக்கிறார்.

உண்மையில், அவர்கள் அழைத்த மறுதினமே கண்ணதாசன் வந்து மருதகாசியைப் பார்த்ததாகவும் இருவருக்குமிடையே இருந்த அன்பினால்தான் பாடல் எழுதத் தயங்கியதாகவும் அவர் சகோதரர் முத்தையன் தமது நூலில் குறிப்பிட்டிருக்கிறார். பிறகு, இருவரையும் தவிர்த்துவிட்டு, மாயவநாதனையும் புதுப்பட்டி முத்துசாமியையும் பந்த பாசத்திற்கு எழுதவைத்திருக்கின்றனர். கண்ணதாசன்மீது கொண்டிருந்த பந்தத்தால் சிவாஜியுடனான பாசத்தை மருதகாசி இழந்திருக்கிறார். “மன்னாதி மன்னன்” திரைப்படத்தில் தனக்கு வந்த வாய்ப்பை மருதகாசிக்கு கண்ணதாசன் விட்டுக்கொடுத்ததாகவும் தகவல் உண்டு.

சக கவிஞர்களுக்காக தம்முடைய வாய்ப்புகளை இழக்கத் துணிந்த மருதகாசியைப் பற்றி சுரதா ஒருமுறை மாறான கருத்தையும் பத்திரிகை பேட்டியில் சொல்லியிருக்கிறார். தான் ஊரில் இல்லையெனச் சொல்லிவிட்டு தனக்கு வரும் பாடல் வாய்ப்புகளை மருதகாசி பறித்துவிடுவதாக சுரதா அப்பேட்டியில் கொதித்திருக்கிறார். திரைப்பாடலாசிரியர்களில் தன்னைப்போலவே பிறரை எண்ணும் குணமுடைய மருதகாசி அவ்வாறு நடந்திருக்க வாய்ப்பே இல்லையென்றுதான் தோன்றுகிறது. தஞ்சை ராமையாதாஸுக்காகப் புகழ்பெற்ற திரை நிறுவனமான விஜயா புரொடக்‌ஷன்ஸின் உரிமையாளர் நாகிரெட்டியைச் சந்திக்கவும் தயங்கியவரே மருதகாசி.

அப்படியிருக்கையில் சுரதா, போகிறபோக்கில் விட்டெறிந்த சொற்களை பெரிதுபடுத்தத் தேவையில்லை. சரித்திரப் படம், சமூகப் படம், பக்திப் படம் எதுவாயிருந்தாலும், அதற்கேற்ற பாட்டு மொழியை மருதகாசி கட்டமைத்திருக்கிறார். இயக்குநர் கே. எஸ். கோபாலகிருஷ்ணனின் எத்தனையோ படங்களில் எத்தனையோ பாடல்களை எழுதியிருக்கும் அவர், தசாவதாரம் படத்தில் ஆமை என்ற சொல்லை வைத்துக்கொண்டு ஆடியிருக்கும் வார்த்தை விளையாட்டை ரசிக்கலாம்.

பத்து அவதாரத்தில் ஆமை அவதாரமும் ஒன்று. அந்த அவதாரத்திற்கு ஏற்ப நில்லாமை, நிலையாமை, பொல்லாமை, தள்ளாமை, இல்லாமை, இயலாமை, இறவாமை, பிறவாமை என பனிரெண்டு ஆமைகளைப் பட்டியலிட்டிருக்கிறார். “ஆமை புகுந்த வீடும் ஆமினா புகுந்த வீடும் உருப்படாது” என்ற பழமொழியைக் கேள்வி கேட்பதாக பாடல் அமையவேண்டுமென கே. எஸ். ஜி. கூறியிருக்கிறார். சாஸ்திர சம்பிரதாயங்களில் ஈடுபாடுடைய கே. எஸ். ஜி., மருதகாசியின் முற்போக்கு வார்த்தைகளில் வசமிழந்திருக்கிறார். “நில்லாமை பதவி நிலையாமை தனை மறந்து” என ஆரம்பிக்கும் அப்பாடல் இணையத்தில் கிடைக்கிறது. தயாரிப்பாளரோ இயக்குநரோ தரும் ஒரு வார்த்தையை வைத்துக்கொண்டு முழு பாடலையும் எழுதும் ஆற்றல் மருதகாசிக்கு இருந்திருக்கிறது.

ஒருமுறை ‘ரொக்கப்புள்ளி’ என்னும் கடைசி வார்த்தை வரும்படி பாடல் எழுத தயாரிப்பாளர் பி. ஏ. பெருமாள் கேட்டிருக்கிறார். ‘ஆளை ஆளைப் பார்க்கிறார்’ என்று ஆரம்பிக்கும் அப்பாடல், இரத்தக்கண்ணீர் படத்தில் வெளிவந்திருக்கிறது. உடுமலையே பல்லவியையும் முதல் சரணத்தையும் எழுதியிருக்கிறார். இரண்டாவது சரணம் முடியும்போது ‘ரொக்கப்புள்ளி’ வரவேண்டுமென்பதால் மருதகாசியை அழைத்திருக்கின்றனர். இந்தி மெட்டிற்கு “சிகரெட்டை ஊதித் தள்ளி / சேர்மீது துள்ளித் துள்ளி / சிநேகிதர் தம்மைக் கிள்ளி / சிரிக்கிறார் ஏதோ சொல்லி / சிங்காரம் பண்ணுவார் / அங்கொரு ரொக்கப்பள்ளி”என்று அவரும், கடைசி வார்த்தையாக ரொக்கப்புள்ளி வருவதுபோல் முடித்துக் கொடுத்திருக்கிறார். உடுமலைக்கு மருதகாசி உதவியதைப்போல பல சந்தர்ப்பங்களில் மருதகாசிக்கும் உடுமலை பாடல் முயற்சிகளில் உதவியிருக்கிறார்.

1954இல் வெளிவந்த ‘தூக்குத்தூக்கி’ திரைப்படத்தில் “கண்வழிபுகுந்து / கருத்தினில் கலந்த / மின்னொளியே ஏன் மவுனம் / வேறெதிலே உன் கவனம்” என்ற பாடலின் இறுதி வரியை “காண்போமே பாதிப்பாதி” என்பதாக முடித்துக்கொடுத்தவர் உடுமலையே என்கிறார் டாக்டர் செ. திருநாவுக்கரசு. “உடுமலை தந்த கவிமலை” என்னும் தலைப்பில் அவர் வெளியிட்ட நூல், அரிய திரைத் தகவல்களை உள்ளடக்கியது. உடுமலை நாராணயகவியைப் பற்றி முழுமையாக அறிந்துகொள்ள அந்நூல் உதவும். ஆய்வு நோக்கில் ஒவ்வொரு பாடலையும் அணுகியிருக்கிறார். பாடலின் வழியே உடுமலையை அவர் பார்த்திருக்கும்விதம் ரசனைக்கும் அப்பாற்பட்ட தளத்தைக் காட்டுகிறது. காலப்பெட்டகம் என்றுதான் அந்நூலைச் சொல்லவேண்டும்.

நன்றாகக் கவனித்தால் ஒருவிஷயம் தெளிவாக பிடிபடுகிறது. கண்ணதாசனை விடவும் எம்.ஜி.ஆர்., தனது ஏற்றமான பாடல்களுக்குப் பட்டுக்கோட்டையையும் மருதகாசியையுமே நாடியிருக்கிறார். ஒருவர் இடதுசாரியாகவும் மற்றொருவர் தமிழரசுக் கழகத்தவராகவும் இருந்தது கவனிக்கத்தக்கது. மாற்றுக் கருத்துடனும் மாற்றுக் கொள்கையுடனும் இயங்கிவந்த மருதகாசியையே அழைத்து, “விவசாயி” திரைப்படத்தில் “கருப்பென்றும் சிவப்பென்றும் வேற்றுமையாய் / கருதாமல் எல்லோரும் ஒற்றுமையாய் / பொறுப்புள்ள பெரியோர்கள் சொன்னபடி / உழைத்தால் பெருகாதோ சாகுபடி” என்று எழுத வைத்திருக்கிறார். “கருப்பென்றும் சிவப்பென்றும் வேற்றுமையாய்” என்னும் வரிகள் போகிறபோக்கில் எழுதப்பட்ட வரிகள் அல்ல.

மிகக் கவனமாக திராவிட முன்னேற்றக் கழகக் கருத்தியலை வெளிப்படுத்தவே எழுதப்பட்டுள்ளன. “கடவுள் என்னும் முதலாளி” பாடலில் வரும் வரிகளே மேலே குறித்திருப்பவை. முதலாளி, தொழிலாளி என்கிற வர்க்க முரண்பாட்டைக் கடவுளுக்கும் பக்தனுக்குமான பிரிவாக பார்த்திருப்பது யோசனைக்குரியது. முதலாளி, தொழிலாளி என்கிற பாகுபாடு யாரால் வந்ததென்பதை விடுத்து, கடவுளையே மருதகாசி முதலாளியாக்கியிருக்கிறார். கடவுளை ஒருபொழுதும் அடையவோ காணவோ முடியாது என்பதுபோல முதலாளியையும் ஒழிக்கவோ அழிக்கவோ முடியாதென்றும் இப்பாடலுக்குப் பொருள் கொள்ளலாம். மருதகாசி, நேரடியான அர்த்தத்திலேதான் எழுதியிருக்கிறார்.

கடவுளே தேர்ந்தெடுத்த தொழிலாளி, விவசாயி என்றுதான் சொல்ல நினைத்திருக்கிறார். அதாவது, அந்த அளவுக்கு உயர்ந்தவன் விவசாயி. தமிழரசுக் கழகத்தில் பணியாற்றிய மருதகாசி, அரசியல் ரீதியிலான தமது அனுபவங்களை, பங்களிப்புகளை எங்கேயேனும் எழுதியிருக்கிறாரா? தெரியவில்லை. தீவிர அரசியலில் இயங்கக்கூடிய வாய்ப்பு இருந்தும் அதுகுறித்தெல்லாம் அவர் பேசாமல் இருந்த சூழலைப் புரிந்துகொள்ளமுடிகிறது. திரைத்துறையில் சகலருடனும் இயைந்து செயலாற்றும்பொழுது, தனிப்பட்ட கொள்கைகளால் அவர் இழந்த வாய்ப்புகள் எவை எவையென்று வேறு யாராவது ஆராயலாம்.

மருதகாசியின் வரிகளை பட்டுக்கோட்டையின் வரிகளாகவும் கண்ணதாசனின் வரிகளாகவும் நம்மில் பலபேர் எண்ணியிருக்கிறோம். குறிப்பாக “மனுசன மனுசன் சாப்புடுறாண்டா தம்பிப் பயலே” என்றதும் யோசிக்காமல் பட்டுக்கோட்டையாரே அப்பாடலை எழுதியதாகக் கருதுகிறோம். ஆனால், அப்பாடல் 1956இல் வெளிவந்த “தாய்க்குப் பின் தாரம்” படத்திற்காக மருதகாசியினால் எழுதப்பட்டது. எம்.ஜி.ஆர். தன்னை ஒரு புரட்சிக்காரராகத் திரைப்படத்தில் நிறுவிக்கொண்ட முதல் பாடலாக அப்பாடலைக் கருதலாம்.

“ஆணவத்தைக் கண்டு பயந்துவிடாதே / எதற்கும் ஆமாம் சாமி போட்டுவிடாதே” என்ற வரிகள், அன்றைய அரசியல் சூழ்நிலையை உத்தேசித்தே எழுதப்பட்டுள்ளன. அதேபோல, “வசந்தமுல்லை போலே வந்து / அசைந்து ஆடிடும் பெண்புறாவே” என்னும் பாடல் கண்ணதாசன் எழுதியதாக பல குறிப்புகள் தெரிவிக்கின்றன. உண்மையில், அப்பாடலை எழுதியவரும் மருதகாசிதான். கணினியோ இணையமோ இல்லாத அந்த காலத்தில் வெளிவந்த பல பாடல்கள், உரிய படைப்பாளரின் பெயரில்லாமல் வெவ்வேறு பெயர்களில் உலவிக்கொண்டிருக்கின்றன.

இக்காலத்தில் வெளிவந்த என்னுடைய பாடல்களுக்கே அதுதான் கதியென்றால், மருதகாசியின் பாடல்களுக்கு நேர்ந்திருப்பதைப் பற்றிச் சொல்லவேண்டியதே இல்லை. எழுதுவதோடு தங்கள் பணி முடிந்ததாக ஒரு கவிஞனோ படைப்பாளனோ நினைத்துவிட்டால், காலப்போக்கில் அவனுக்கே அவன் படைப்பு சொந்தமில்லாமல் போய்விடும் ஆபத்து இருக்கிறது. யாருடைய பெயர் திரும்பத் திரும்ப தங்கள் காதுகளில் விழுகிறதோ அவரே அனைத்துக்கும் சொந்தமானவர் என்று நினைப்பது ரசிகனின் மனோபாவம். அபரிமிதமான பற்றை ஒரு படைப்பாளர்மீது ரசிகன் வைத்துவிட்டால், அவரைத் தாண்டி யாருமே இல்லை என்று அவன் எண்ணிக்கொள்கிறான். 1955இல் வெளிவந்த “மங்கையர் திலகம்” திரைப்படத்தில் “நீலவண்ண கண்ணா வாடா” என்றொரு பாடல்.

எப்போது அந்தப் பாடலைக் கேட்டாலும், என்னையுமறியாமல் ஒருவித மனத் தூண்டுதலுக்கு ஆளாவேன். வரிகளின் இடையே மருதகாசி செய்திருக்கும் கற்பனைகள் அப்படிப்பட்டவை. குழந்தைக்குத் தாலாட்டு பாடும் நாயகி, அக்குழந்தைக்காக இயற்கையிடம் உரையாடுவதுபோல மருதகாசி எழுதியிருப்பார். “நடுங்கச் செய்யும் வாடைக் காற்றே / நியாயமல்ல உந்தன் செய்கை / தடை செய்வேன் தாளைப் போட்டு / முடிந்தால் உன் திறமை காட்டு” என்ற வரிகளை அவர் எங்கிருந்து பெற்றிருப்பார் என யோசித்துக்கொண்டே இருக்கிறேன். மரபிலக்கியச் செழுமையை அதைவிடவும் அழகாக ஒரு திரைப்பாடலில் கொண்டுவர முடியுமா என்பது சந்தேகமே. அப்பாடலில் வரும் வரிகளுக்கு ஏற்பவே காட்சிகளையும் அமைத்திருப்பர்.

வாடைக் காற்றுபட்டு குழந்தை எழுந்துவிடுமென யோசிக்கும் தாய், காற்றைத் தடை செய்ய ஜன்னலை மூடுகிறாள். காட்சியில் அவ்வளவுதான் கொண்டுவர முடிந்திருக்கிறது. ஆனால், அதையும் தாண்டி காற்றுக்கே சவால்விடுவதுபோல, “முடிந்தால் உன் திறமை காட்டு” என்று மருதகாசி சிந்தித்திருக்கிறார்.

ஓர் அளவுக்குமேல் காட்சிப்படுத்த முடியாத இடத்திலேதான் இலக்கியங்கள், திரை ஊடகங்களை ஜெயிக்கின்றன. எப்படி யோசித்தாலும் எவ்வளவு முயன்றாலும் மருதகாசியின் அப்பாடல் வரிகளை காட்சிக்குள் கொண்டுவருவது கடினமென்றே நினைக்கிறேன். கவிஞனோ பாடலாசிரியனோ இயக்குநரையும் ஒளிப்பதிவாளரையும் திணறடிக்கும் இடங்களை மருதகாசி பல பாடல்களில் காட்டியிருக்கிறார். காட்சிக்காகவும் சூழலுக்காகவுமே ஒரு பாடல் எழுதப்பட்டாலும், அக்காட்சியையும் சூழலையும் மிஞ்சக்கூடிய பகுதிகள் அவர் பாடல்களில் இருக்கின்றன. இசைமேதை தட்சிணாமூர்த்தியின் இசையில் நீல வண்ணக் கண்ணா பாடலைப் பாடிய ஆர். பாலசரஸ்வதியின் குரல், சின்னச்சின்ன கமகங்களில் மருதகாசியையும் கடந்துவிடுவதைக் கவனிக்கலாம்.

ஒரு பாடலின் ஜீவன், அப்பாடலைப் பாடும் பாடகரின் புரிதலில்தான் பொதிந்திருக்கிறது. அதனால்தான் மருதகாசி, டி.எம். சௌந்தரராஜனைத் திரையில் பாட வைக்க பெருமுயற்சி எடுத்திருக்கிறார். சம்பந்தப்பட்ட இயக்குநரும், நடிகரும் தயங்கியபோதிலும், ஒரு பாடகன் அறிமுகமாவதில் அவர் காட்டிய அக்கறையென்பது சாதாரண விஷயமல்ல. ஆயிரக்கணக்கான பாடல்கள் பாடிய டி. எம். சௌந்தரராஜன், தன்னை உருவாக்கிய பிதாமகனென்று மருதகாசியையே சொல்லியிருக்கிறார்

மருதகாசியின் குறிப்பிடத்தக்க பாடல்களின் வரிசையைக் கவனித்தாலே அவர், எத்தகைய தமிழாய்ந்த பாடலாசிரியர் என்பதை உணர்ந்துவிடலாம். ‘சத்தியமே லட்சியமாய்க் கொள்ளடா, முல்லை மலர் மேலே, சமரசம் உலாவும் இடமே, வருவேன் நான் உனது மாளிகையின் வாசலுக்கே, ஏர்முனைக்கு நேர் இங்கே எதுவுமே இல்லை, காவியமா நெஞ்சின் ஓவியமா, கோடி கோடி இன்பம் பெறவே, உலவும் தென்றல் காற்றினிலே, நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே, மணப்பாற மாடுகட்டி, மாட்டுக்கார வேலா, ஆடாத மனமும் உண்டோ’ என்பனபோல முதல் வரியிலேயே தன்னைக் கவனிக்க வைத்துவிடும் பேராற்றல் அவருக்கு இருந்திருக்கிறது.

தனக்கு முன்னே இருந்த பாடலாசிரியர்களிடமிருந்து தன்னை வேறுபடுத்திக் காட்ட எத்தனையோ விதமாகச் சிந்தித்திருக்கிறார். இன்னும் சொல்லப்போனால், பாடலாசிரியர்களில் கண்ணதாசனுக்கு முன், எளிய பிரயோகங்களில் மக்களை ஈர்த்தவராக அவரைக் கருதலாம். அவர் காலத்தில் அவரே ஏனைய கவிஞர்களை முன்செலுத்தும் ஏராகவும் இருந்திருக்கிறார். அவருடைய பாதிப்பில் வெளிவந்த பாடல்களைப் பற்றி தனிப்பட்டியலே என்னிடமிருக்கிறது. “தென்றல் உறங்கிய போதும் / திங்கள் உறங்கியபோதும் / கண்கள் உறங்கிடுமா / காதல் / கண்கள் உறங்கிடுமா?” என்று அவர் எழுதிய வரிகள், எத்தனைப் பாடலாசிரியர்களின் வரிகளில் தென்படுகின்றன என்பதை நீங்களே யூகிக்கலாம்.

காதல் பாடல்களை எடுத்துக்கொண்டாலும், சமூகப் பாடல்களை எடுத்துக்கொண்டாலும் அவர் வரிகள் தனித்துத் தெரிகின்றன. கருத்தியல் ரீதியிலான அணுமுறையைத் தவிர்த்து, ஜனரஞ்சகமாக எழுதுவதிலேயே அவர் முழு கவனம் செலுத்தியிருக்கிறார். இன்றுவரை “சமரசம் உலாவும் இடமே” பாடலுக்கு இணையான ஒரு பாடல் திரைப்படத்தில் வரவில்லை. சித்தர்களின் சொற்களை உள்வாங்கி, மரணத்தின் வலி நிறைந்த சூழலை கொண்டாடும்படி எழுதியிருக்கிறார். அவரே “மனமுள்ள மறுதாரம்” என்ற திரைப்படத்தில் “தூங்கையிலே வாங்குற மூச்சு / இது, சுழி மாறிப் போனாலும் போச்சு” என்றும் கூறியிருக்கிறார்.

அதையெல்லாம்விட, “ஏர்முனைக்கு நேர் இங்கே” என்னும் பாடலில், விளைந்து நிற்கும் கதிருக்கு ஓர் உவமை சொல்லியிருக்கிறார். அதற்கு நிகரான ஒரு கற்பனையை இதுவரை யாருமே சிந்திக்கவில்லை. “வளர்ந்துவிட்ட பருவப் பெண்போல் உனக்கு வெட்கமா / தலை, வளைஞ்சு சும்மா பாக்குறியே தரையின் பக்கமா?” என்று ஒரு திரைப்பாடலைக் காவியப் பண்பு நிறைந்ததாக அவரால் மட்டுமே எழுத முடிந்திருக்கிறது.

சொல்லாட்சிகளே திரைப்பாடல்களை புதிதாகக் காட்டுகின்றன. மருதகாசியை முந்தையத் தலைமுறை பாடலாசிரியராக நான் கருதியதில்லை. ஏனெனில், அவர் பாடல்களை ஊன்றி வாசிக்கையில் இன்றை பிரதிபலிக்கின்றன. காலம் கடந்தும் நிற்கக்கூடியவை மட்டுமல்ல, காலத்தை ஒட்டியும் நிற்கக்கூடிய பாடல்களை எழுதியிருப்பவரே மருதகாசி. “விந்தைமிகு மகுடி முன்னாலே நாகத்தைப் போலே” என்று அவரே ஒரு பாடலில் எழுதியிருக்கிறார். மகுடி இசைக்கு நாகமே மயங்குமெனில், மருதகாசியின் பாடல் மகுடிக்கு முன்னா

%d bloggers like this: