நாகரத்தினமும் முத்துப்பழனியும்

டையமுடியாத ஒன்றின்மீது வைக்கும் அன்புதான் பக்தியோ எனும் கேள்வி எனக்குண்டு. ஆண்டாளும் மீராவும் கண்ணனிடம் கொண்ட காதல், பக்தியாகப் பார்க்கப்படுகிறது. இறுதியில் அவர்கள் இருவருமே கண்ணனைச் சேர்ந்தனர் என்னும் குறியீடு, பக்தியையும் காதலையும் இருத்திவைக்க எழுதப்பட்ட கட்டுக்கதைகளே எனினும், அக்கதைகளின் வழியே கடத்தப்படும் உணர்வுகள் மலர்ச்சிக்குரியவை. கட்டுக்கதைகள் எனச் சொல்வதால் நான் அக்கதைகளைச் சந்தேகிப்பதாக அர்த்தமில்லை. இன்றைய சூழலில் அக்கதைகளில் வரும் சம்பவங்களையும் காட்சிகளையும் உணர்ந்து உள்வாங்கும் சாத்தியமின்மையால் அவ்விதம் சொல்கிறேன்.

அக்கதைகள் தெள்ளத் தெளிவாக நம்பிக்கைகளை விதைக்கின்றன. ஆழ்ந்த ஈடுபாடும் பிரியமும் வைத்தால் அடையமுடியாத எல்லைகளையும் எட்டிவிடலாமெனக் காட்டுகின்றன. ஆன்மீக இலட்சியவாதத்தை முன்வைக்கும் அக்கதைகள், காதலையும் காமத்தையும் கலந்திருப்பதால் எனக்குப் பிடிக்கின்றன. பெங்களூர் நாகரத்தினம் அம்மாள், தியாகராஜர்மீது கொண்ட அன்பினால் வாழ்வு மொத்தத்தையும் அவருக்கே அர்ப்பணித்திருக்கிறார். தேவதாசி மரபில் வந்த அவர், இறுதிக்காலங்களில் தியாகராஜரை ஆகப்பெரும் நாதக் கடவுளாக நிறுவ உடல், பொருள், ஆவி அத்தனையையும் அளித்திருக்கிறார். வெறும் இசைக்காதலென்று அந்த அம்மையின் உணர்வுகளை ஒதுக்கிவிடமுடியாது.

ராமநாமத்தில் தியாகராஜர் கொண்டிருந்த காதலிலும் பக்தியிலும் கொஞ்சமும் குறையில்லாததே அந்த அம்மையாரின் தியாகராஜ பக்தியுமென்று சொன்னால் பிழையில்லை. இளவயதில் தந்தையாலும் பின்னர் அடைக்கலம் கொடுத்த அனைவராலும் கைவிடப்பட்ட ஒருவர், தியாகராஜரும், அவர் இசையுமே எல்லாமுமென்று வரித்துக்கொண்டதில் வியப்பில்லை. இருக்கும்போது அவர் சேவடிகளுக்குச் சேவைசெய்ய முடியாமல் போனாலும், சமாதியான தியாகராஜருக்கு மண்டபமும் உற்சவமும் எழுப்பிய பெருமை அவருடையது.

ஒரு பெண் ஓர் ஆண்மீது எப்போது அளவற்ற காதலையும் பக்தியையும் வைக்கிறாள் என்பதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. கனிந்த பிரேமையும், கலப்படமற்ற பிரியங்களும் ஒன்றிணையும் மிக உயர்ந்த நிலை அது. ஆண், பெண்மீதோ அல்லது பெண், ஆண்மீதோ கொள்ளும் காதலைக் காமத்தின் விளைவாகவும் எதிர்பார்ப்பாகவும் மட்டுமே பார்ப்பவர்கள் உண்டு. ஆனால், நாகரத்தினம்மா தியாகராஜர்மீது வைத்திருந்ததோ பார்வைகளுக்கெல்லாம் அப்பாற்பட்ட ஒன்று. அவர் தன்னை தியாகராஜ சுவாமிகளின் தாசியென்றே அறிவித்துக்கொண்டவர்.

ஆந்திராவிலும் தமிழ்நாட்டிலும் 1235 இசைக் கச்சேரிகள் செய்தவர். இசையே வாழ்வென்று ஆகிவிட்ட பின்னும், சமூக மாற்றத்திற்காக உழைக்கத் தயங்காதவர். குரல் மிளிரச் சமஸ்கிருதத் துதிப்பாடல்களை 1929இல் நடந்த சநாதன தர்ம மாநாட்டில் பாடியவர். பன்மொழிப் புலமையும் கலைகளில் ஈடுபாடும் மிக்க அவர், சங்கீதம் பிழைக்க வேண்டுமானால் ஆர்மோனியப் பெட்டியை ஆற்றில் தூக்கி எறிய வேண்டும்’ என்றிருக்கிறார்.

தென்னக இசையின் ஆதாரக் கருவியாக ஆர்மோனியத்தை ஏற்காத காலத்தில் அவர், ஊரெங்கும் தம்புராவைச் தூக்கிச் சுமந்த பெருமாட்டி. தம்புராவை மீட்டியபடி அவர் காட்சிதரும் ஒரு புகைப்படம், மிகப் பிரசித்தம். `ஒருகாலத்தில் என்னுடைய கண்ணழகைக் காண மைசூர் மகாராஜாவே வருவார். அப்படிப்பட்ட என்னைத் தியாகராஜர் எப்படியோ மாற்றிவிட்டார்’ என்று மரணத்திற்குக் சிலநாள் முன்புவரை தன்னைச் சந்திக்க வந்தவர்களிடம் தெரிவித்திருக்கிறார்.

தியாகராஜரே சரணமென்று அந்த அம்மையார் நினைக்கவும் நெகிழவும் இசையைத்தவிர வேறெதுவும் காரணம் இருப்பதாகத் தெரியவில்லை. தன்னையும் தன் வாழ்வையும் மீட்ட இசைக்குக் கைம்மாறாக எதையேனும் செய்ய விரும்பியே தியாகராஜரின் காலடி பதிந்த திருவையாற்றை நோக்கி நகர்ந்திருக்கிறார். அங்கே, மண்மூடிக் கிடந்த தியாகராஜரின் சமாதியைத் தேடிக் கண்டுபிடித்து, மைசூர் ஆஸ்தான வித்துவான் கிருஷ்ணப்பாவின் விருப்பத்தை நிறைவேற்ற தஞ்சை அரசரின் உதவியை நாடியிருக்கிறார். தியாகைய்யருக்கு இசைக் கோயில் எழுப்பி, 1925இல் கும்பாபிஷேகம் நடத்த அவர் பட்டபாடுகள் கொஞ்சமல்ல. அக்கோயில் பணிக்காகச் சொந்த வீட்டையும் பாடிச் சம்பாதித்த பொன், பொருள் எனச் சேமித்த சகலத்தையும் செலவழித்திருக்கிறார். வருமான வரியை அதிகமாகக் கட்டிய முதல்பெண் என்றறியப்பட்டிருந்த அவர், தியாகராஜ பிரேமையால் வாடகை வீட்டுக்கும் வழியில்லாத நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்.

திருவையாற்றை அடுத்துள்ள பெரும்புலியூர் என்னும் குக்கிராமமே என் அப்பா பிறந்த ஊர் என்பதால், எப்போதெல்லாம் அவ்வூருக்குப் போகிறேனோ அப்போதெல்லாம் நாகரத்தினம்மா உண்டாக்கியுள்ள சந்நிதியையும், அருகே அமைந்துள்ள அவர் சமாதியையும் வணங்காமல் திரும்பமாட்டேன். தியாகராஜரின் இசை ஓர் உச்சமென்றால், தியாகராஜருடன் தன்னையே புதைத்துக்கொண்ட அந்த அம்மையின் அதீத அன்பும் பக்தியும் இன்னொரு உச்சம். கோயிலுக்கு நிலம் ஒதுக்குவதிலும், கூடி ஒரு காரியத்தை நிறைவேற்றுவதிலும் எப்பவும்போல் இரண்டு கட்சிகளாகப் பிரிந்துநின்ற பிராமணர்கள், அவரை நீதிமன்றம்வரை அலைக்கழித்து அவமானப்படுத்தியது தனிக்கதை.

தியாகராஜரைப் பிராமணக் குடுவையில் அடைத்து, எப்படியாவது தங்களையும் தங்கள் லெளகீகத்தையும் காப்பாற்றிக்கொள்ள முனைந்த அவர்கள், நாகரத்தினம்மாவை நாக்கூசும் சொற்களால் கேவலப்படுத்தியிருப்பதைக் கேட்டால் இதயமே சுக்கலாகிவிடும். இசையை உரிமை கொண்டாடி, அது தங்களுக்கே உரியதென்றும் இன்னபிறர் கேட்பதும் பாடுவதும் தீட்டென்றும் வாதிட்ட ஈனத்தனங்களை முறியடிக்கப் பெரும் போராட்டத்தைத் தமிழ்ச்சமூகம் நடத்தியிருக்கிறது. தேவதாசி குலத்தில் பிறந்த ஒருத்தி, தியாகராஜரை தெய்வப் புருஷராக்க மேற்கொண்ட முயற்சிகளை அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

தங்களுக்குப் பாத்தியமான இடத்தில் வந்து வேற்றுசாதி பெண், கூரை வேய்கிறாளே எனக் குமைந்து அவர் ஆற்றிவந்த காரியங்களை வீழ்த்த பல்வேறு நெருக்கடிகளை மேற்படியார்கள் கொடுத்திருக்கின்றனர். தியாகராஜர் இசையை விரும்புகிற, இசையை வழிபடுகிற எல்லோருக்குமானவர். அவரைத் தம் சமூகத்திற்கு மட்டுமே உரியவராகக் கருதுபவர்கள் இன்னமும் இருக்கிறார்கள். எல்லாத் தடுப்புகளையும் மீறியே தம்முள் எழும்பிநின்ற தியாகேச பக்தியை நாகரத்தினம்மா நிரூபித்து, 1952இல் இசையுடன் கலந்திருக்கிறார்.

நாகரத்தினம்மா முன்கை எடுக்காமல் விட்டிருந்தால் மார்கழி மாத இசைக் கச்சேரிகள், வருடாந்திர விழாவாகத் திருவையாற்றில் நிகழவும் தொடரவும் வாய்ப்பில்லை. பக்தியின் உச்சியில் நின்றுபார்க்கும்பொழுது அன்பு, காதல் என்பதெல்லாம் வெகு சின்னதாகத் தெரிகின்றன. இசைக்கு இத்தகைய அடையாளத்தை ஏற்படுத்திய அதே அம்மாதான், இலக்கியத்திலும் இன்னொரு எழுச்சிக்குக் காரணமானவர்.

இசைக்குக் கோயில்கட்டிக் கும்பாபிஷேகத்திற்கு வழிவகை செய்த அவர், ஓலைச்சுவடியில் ஒருவர் பார்வைக்கும் வராமல் இருந்த `ராதிகா சாந்தவனம்’ எனும் தெலுங்குக் காப்பியத்தைப் பதிப்பித்து வெளியிட்டிருக்கிறார். இன்று தெலுங்கு இலக்கியத்தின் செவ்வியல் நூல்களில் ஒன்றாகக் கருதப்படும் ராதிகா சாந்தவனம், கண்ணனுக்கும் ராதிகாவுக்கும் இடையே நிகழ்ந்த பிணக்கையும் பிரியங்களையும் சொல்வது.

தகாத காதலையும் காமத்தையும் காப்பியமாக்கிய முத்துபழனி, தஞ்சாவூரைச் சேர்ந்த அரசவை நடனமாது என்பதைப் பலர் அறிந்திருக்கலாம். நடனமாது மட்டுமல்ல, மராட்டிய மன்னரான பிரதாப் சிம்ஹாவின் ஆசைநாயகியாகவும் அறியப்படுகிறார். கலைகளில் தேர்ச்சியும் பன்மொழிப் புலமையும் வாய்த்த முத்துபழனி, ஆண்டாளின் திருப்பாவையைத் தெலுங்கில் மொழிபெயர்த்தவர். அந்தப்புரத்தில் ஆடல் அரசியாகவும், அரண்மனையில் அரசனுக்கே ஆலோசனை சொல்பவராகவும் இருந்ததாகத் தெரிகிறது.

முத்துபழனி எழுதிய `ராதிகா சாந்தவனம்’ நூலைத் தெலுங்கிலிருந்து ஆங்கிலத்தில் சந்தியா மூல் சந்தாணி, `The appeasement of Radhika / Radhika santhavanam’ என்னும் தலைப்பில் மொழிபெயர்த்து பென்குயின் பதிப்பாக வெளியிட்டிருக்கிறார். ஆங்கிலத்தில் மட்டுமே வாசிக்கப்பட்ட அந்த நூல், தமிழிலும் வந்திருக்கிறது. தில்லிப் பல்கலைக் கழகத்தில் துணைப் பேராசிரியராகப் பணியாற்றும் முனைவர் தி. உமாதேவி பெயர்த்திருக்கிறார். காவ்யா வெளியீடாக வந்துள்ள அந்நூல், ஆங்கிலத்திற்கும் மூலமொழிக்கும் ஊறுசெய்யாமல் ஆக்கப்பட்டிருக்கிறது. 584 பாடல்களையும் உரைநடை வடிவில் உமாதேவி தந்திருக்கிறார்.

ஓரளவு பாடல்களின் அடிநாதத்தைத் தொட்டிருக்கிறார். ஓசை ஒழுங்குகளைத் தவிர்த்து, உரைநடையில் வாசித்தாலும் பாடல்களின் பதமும் அழகும் கெடாமல் வந்திருக்கின்றன. கவிதைப் பயிற்சியிருந்தால் இன்னுமே சிறப்பாக பெயர்த்திருப்பேன் என முன்னுரையில் தெரிவித்திருக்கிறார். ஒரு தமிழ்ப்பெண் எழுதிய தெலுங்குக் காப்பியத்தை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்குத் தருவித்த முயற்சிக்காகவே உமாதேவியைப் பாராட்டலாம். தெலுங்குச் சந்தங்களைத் தமிழுக்கேற்ப மாற்றியமைக்க வேறு எவரேனும் முயலலாம்.

இன்றுகூட, பெண் கவிஞர்கள் எழுதத் தயங்கும் பாலியல் இச்சைமிகுந்த சொற்களை 17ஆம் நூற்றாண்டிலேயே எழுதிய முத்துபழனி, காலங்கடந்தேனும் நம்முடைய கைகளுக்குக் கிடைத்திருக்கிறார் என்பது மகிழ்வுக்குரியது. பாலியல் இச்சையை வெளிப்படுத்தும் எழுத்துமுறை, இடைக்காலத்தில் பக்தியாக மாற்றப்பட்டிருக்கிறது. காலவரையறைகளுக்கு அப்பால், ஒரு பெண்ணின் எழுத்தாகக் கவனத்தை ஈர்க்கும் முத்துபழனி, கண்ணன் – இலா – ராதிகா ஆகியோரின் காதலைக் காமம் பாரித்த வார்த்தைகளில் வடித்திருக்கிறார். பாலியல் பதிவுகளையும் மிகச் சாமர்த்தியமான சொல்லாடல்களின் வழியே கடத்தியிருக்கிறார். ஆச்சர்யமூட்டும் செய்தியே வரலாறாக மாறுகிறது. சந்தேகமில்லாமல் முத்துபழனியை வரலாற்றை மாற்றியெழுதியவர் எனலாம். ராதிகா கண்ணனின் அத்தை. இலாவோ மாமன் மகள்.

கண்ணனுக்கு இலாவை மணம்முடித்து வைக்கும் ராதிகா, தன்னைவிட்டுப் பிரிந்த கண்ணனுக்காக ஏங்கிச் சரிவதையும், எதிர்பார்ப்பில் தேகம் மெலிவதையும் முத்துபழனி தயக்கமில்லாமல் எழுதியிருக்கிறார். கண்ணன் ராதிகாவிடமும் இலாவிடமும் கொள்ளும் காதலை `அவளது பெருமைக்குரிய பெரிய முலைகள் / மலைகளைவிட உயர்ந்தவை / அவளது அசைந்தாடும் இடை / அசைந்து நடக்கும் யானையைவிடச் சிறந்தது / அவளது குழிந்த தொப்புள் / ஆச்சர்யமூட்டும் புங்கை மரம் போன்றது / இத்தனை அழகுடைய அவள் / கலிங்க மன்னனான என்னை இயல்பாக ஆட்கொண்டாள்’ என்பதுபோல எழுதும் அவர், எங்கேயும் விரசத்தின் விளிம்பைக்கூடத் தொடவில்லை. அத்தியந்த அன்பின், பக்தியின் சாரத்தில் நின்றுகொண்டே சலிக்காமல் எழுதியிருக்கிறார்.

பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்த முத்துபழனியின் பின்புலத்திலிருந்தும் அப்பாடல்களைப் பார்க்கவேண்டிய அவசியத்தைச் சந்தியா மூல் சந்தாணி தெரிவிக்கிறார். தஞ்சை நாயகி புகழ்பெற்ற அரசவைக் கணிகை என்பதும், முத்துபழனியின் தந்தை தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத் தக்கவை. தஞ்சை நாயகி, அய்யாவுய்யா என்பவரின் மகனான `முத்துயாலு’வைத் தத்தெடுத்து வளர்க்கிறார். அய்யாவுய்யாவைச் சகோதரனாகப் பாவித்த தஞ்சை நாயகி, பிரதாப் சிம்ஹாவின் அந்தரங்க ஆசையைத் தீர்க்கும் பொறுப்பிலிருந்தவர். நவசரத்திலும் திறமை பூண்டிருந்த அவருக்குத் தாய்மையுணர்வு உந்தித் தள்ளியதால் முத்துயாலுவைச் சிறுவயதிலிருந்து வளர்த்திருக்கிறார்.

பருவ வயது வந்ததும் `ராமவது’ என்னும் பெயருடைய பெண்ணை முத்துயாலுவுக்கு மணம் முடித்தும் வைக்கிறார். அவ்வகையில் அவர்கள் இருவருக்கும் பிறந்த மகளே முத்துபழனி. பிரதாப் சிம்ஹாவின் ஆசைக்கு உரியவராகவும் இருந்த தஞ்சை நாயகி, தனக்குப் பிறகு முத்துபழனியை அவ்விடத்திற்கு நியமித்ததாகவும் தெரிகிறது. அதாவது, பாட்டியாகிவிட்ட தஞ்சை நாயகி, பிரதாப் சிம்ஹாவுக்குத் தன்னுடைய பேத்தி முறையிலான பெண்ணைத் துணையாக்கிவிட்டு, நகர்ந்துகொள்கிறார்.

சிலகாலம் பிரதாப் சிம்ஹா, முத்துபழனியின் கலையிலும் காதலிலும் திளைத்திருக்கிறார். அறிவாற்றல் மிக்க முத்துபழனியின் அன்பில் கட்டுண்டுக் கிடந்த அவர், ஒருகட்டத்தில் தஞ்சை நாயகியின் பக்கமே திரும்பியிருக்கிறார். தனக்குக் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் குறைந்துபோவதைக் கண்ட முத்துபழனிக்கு, தஞ்சை நாயகிமீது கசப்பும் வெறுப்பும் தோன்றியிருக்கிறது. அந்தத் துக்கத்தையும் விம்மலையும் இணைத்தே ராதிகா சாந்தவனத்தைப் படைத்ததாகச் சொல்லப்படுகிறது. இலாவாகத் தன்னையும் ராதிகாவாக தஞ்சை நாயகியையும் உருவகப்படுத்தியே எழுதியதாகவும் கருதப்படுகிறது.

வாழ்விலிருந்து பிறப்பதே கலையும் இலக்கியமும் என்று சொல்லப்படுவதை இத்துடன் இணைத்துப் பார்க்கலாம். காப்பியத்தை வாசிக்கும்பொழுது பெண் மனதைப் புதிர்ப் பக்கங்களைப் புரட்டுவதுபோல் இருக்கின்றன. `முலைகள்’ எனும் தலைப்பில் நூல் வெளியிட்டதற்காக இலக்கியக் காவலர்களும், கலாச்சாரக் கங்காணிகளும் கவிஞர் குட்டிரேவதியை என்னவெல்லாம் சொன்னார்களென்று இந்த இடத்தில் நினைவுக்கு வருவதைத் தவிர்க்கமுடியவில்லை. காமமும் காதலும் வார்த்தையிலோ உடலிலோ இல்லை, அவை மனதிலிருக்கின்றன. வக்கிரமும் குரூரமும் நிறைந்த ஆண்கள், இதே வார்த்தைகளை இயல்பாகத் தங்கள் எழுத்திலும் பேச்சிலும் பயன்படுத்துவது பிரச்சனையாக ஆவதில்லை.

முத்துபழனியின் எழுத்துகளை முழுவதுமாக வாசித்தால் அவர் வெள்ளிவீதியாரையும் ஆண்டாளையும் விஞ்சக்கூடியப் பதங்களை ஆக்கி அளித்திருப்பவர் என்பதை அறிந்துகொள்ளலாம். தமிழிலக்கியத்தில் குறிப்பாக, சங்கப்பாடல்களின் தொடர்ச்சியை முத்துபழனியின் பாடல்களில் பார்க்கமுடிகிறது. கற்பூரம் நாறுமோ / கமலப்பூ நாறுமோ என்று ஆண்டாள் எழுதிய பதத்தை வேறு வகையான வாக்கிய அமைப்பில் தெலுங்கில் செய்திருக்கிறார். உள்வாங்கிய குறியீடுகளையும் படிமங்களையும் அப்படியே பயன்படுத்தாமல், அவருக்கே உரிய விதத்தில் வழங்கியிருப்பது தனித்துவம்.

ஒருவேளை அவர் தமிழில் எழுதியிருந்தால் இன்னமுமே சிறப்பாக அமைந்திருக்குமோ என்னவோ?. தமிழ்நாட்டில் அதுவும் தஞ்சாவூரில் பிறந்த முத்துபழனி தமிழில் எதுவும் எழுதாமல் தெலுங்கில் ஏன் காப்பிய முயற்சிவரை மேற்கொண்டார் என்பது ஆராயத் தக்கது. ராதிகா சாந்தவனத்தை வாசித்துக் கொண்டே வருகையில் முத்துபழனி பயன்படுத்தியுள்ள பல பதங்கள், எனக்கு நற்றிணையையும் குறுந்தொகையையும் நினைவு படுத்தின. ஆகச்சிறந்த படைப்பென்பது கிளைத்துப் பெருகும் சாத்தியங்களை உடையதென்பர். அந்தவிதத்தில் `இல்லோன் இன்பம் காமுற்றா’ எனும் குறுந்தொகை பாடல், ராதிகாவின் ஏமாற்றத்தையும் ஏக்கத்தையும் சொல்வதாகத் தெரிந்தது. ஏதோ ஒரு சரியான காரணத்தால் சந்திக்க வராமல் போன காதலியைத் தப்பிதமாகக் கற்பனை செய்துகொண்ட காதலனின் மன உணர்வைக் காட்டும் மிக அழகிய பாடல் அது.

புரிந்துகொள்வதில் ஏற்படும் பிரச்சனையால் ஒரு காதல் எப்படிப் பிரிந்தது எனச் சொல்லவந்த பரணர் `இல்லோன் இன்பம் காமுற்று ஆஅங்கு / அரிது வேட்டனையால் நெஞ்சே காதலி / நல்லள் ஆகுதல் அறிந்து ஆங்கு / அரியள் ஆகுதல் அறியாதோயே’ என்று எழுதியிருக்கிறார். அப்பாடல் மிகச்சிறிதே எனினும், அவ்வரிகளை விவரித்து மணிக்கணக்கில் பேசலாம். சங்கப்பாடல்களின் மையத்தை உள்வாங்கினால் அவற்றை வைத்து ஏராளமான கதைகளையும் நாவல்களையும் உருவாக்கமுடியும். சங்கப்பாடல் வரிகளை முன்வைத்து அப்படிக் கதைகளாக பலர் எழுதியுள்ளனர். நா.பார்த்தசாரதியின் `புறநானூற்றுக் கதைகள்’ நூல், அவற்றில் ஒன்று.

பரணரின் `இல்லோன் இன்பம் காமுற்றா’வையும் ஒருகதையாக ஆக்கிப்பார்க்கலாம். வசதிமிக்க வீட்டில் காதலி வசிக்கிறாள். அவளைச் சந்திப்பதென்பது அத்தனை எளிதில்லை. காதலனோ பக்கத்து ஊரைச் சேர்ந்த மிக எளிய குடும்பத்தைச் சேர்ந்தவன். வசதி எப்படியிருந்தாலும் இருவரும் காதலிக்க ஆரம்பித்துவிடுகிறார்கள். அடிக்கடி சந்தித்து அன்பையும் முத்தங்களையும் பரிமாறிக்கொள்ளவும் தயங்குவதில்லை. ஆனால், சில நாட்களாகக் காதலியைச் சந்திப்பதில் அவனுக்குச் சிக்கல் ஏற்பட்டுவிடுகிறது. காரணத்தைத் தெரிந்துகொள்வதற்கேனும் ஒருமுறை சந்திக்க வேண்டும்போல் ஆகிவிட, அவனும் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கிறான். அவளுடைய தோழியிடமும் தன்னுடைய ஏக்கத்தை அறிவித்தும் காண வழியில்லை. சரி, நாமே இரவில் சென்று அவளை யாருக்கும் தெரியாமல் சந்தித்துவிடுவோம் என எண்ணுகிறான்.

அதுபடி, ஊரே உறங்கிய நள்ளிரவில் ஒருவருக்கும் தெரியாமல் கிளம்பி, காதலியின் ஊர் எல்லைக்கு வருகிறான். வந்தால் காவலர்கள் ஊர் முழுக்கச் சுற்றிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களின் கண்ணில் மண்ணைத் தூவுவது ஆகாத காரியமென முதல்நாள் தப்பித்துவிடுகிறான். மறுநாள் கிளம்பிப் போகையில் காவலர்களுக்குப் பதிலாக நாய்கள் ஊரை வட்டமிட்டுக்கொண்டிருக்கின்றன. அகஸ்மாத்தாக ஒரு நாய் பார்த்து, குரைக்க ஆரம்பித்தாலும் முழுக் காரியமும் கெட்டுவிடுமென்று யோசித்து அன்றும் வேதனையுடன் திரும்பிவிடுகிறான்.

மூன்றாவது நாள், மிகக் கவனமாகக் காதலியின் வீட்டை அடைந்துவிடும் அவன், அவள் படுத்திருக்கும் அறையை ஒட்டி வளர்ந்திருக்கும் மரத்தை அடைகிறான். `எப்போது வந்தாலும் வருகையைத் தெரிவிக்க மரத்தை உலுக்கி, சப்தம் எழுப்பு நான் வந்துவிடுகிறேன்’ எனச் சொல்லியிருப்பதால் அப்படிப் பின்னிரவுவரை மரத்தை உலுக்குகிறான். ஆனால், அவளோ எட்டிக்கூடப் பார்க்கவில்லை. எப்பவும் வசதியான வீட்டுப் பெண், இப்படித்தான் நம்பவைத்துக் கழுத்தை அறுத்துவிடுவாள்’ என நினைத்து அவன் கலங்கிய கண்களுடன் அங்கிருந்து விடுபட்டுக் காதலைத் துறக்கிறான்.

காலம் சில ஓடியபின் காதலியின் தோழியிடம் இதை அவன் தெரிவிக்க, அவளும் காதலியிடம் போய் நியாயம் கேட்கிறாள். இரவு முழுக்க மரத்தையும் இதயத்தையும் உலுக்கிக்கொண்டிருந்தவனை நீ ஏன் கவனிக்காமல் இருந்தாய்’ என்றதும்,ஒருமுறை மரம் உலுக்கப்படும் சத்தம் கேட்டதும் எழுந்துவந்து பார்த்தேன். ஆனால், ஆள் யாருமில்லை. மரத்தைப் பார்த்தால் ஒரு பறவை இன்னொரு பறவையுடன் கிளையில் அமர்ந்து கூடிக்குலவுவது தெரிந்தது.

அக்குலவலில் கிளைகள் அசைய, ஓசை வருவதாகவும் பட்டது. எனவே, என் காலடி ஓசையிலோ பார்வையிலோ அப்பறவைகள் பிரிந்துவிடுமோ என்றஞ்சி, படுக்கைக்குத் திரும்பிவிட்டேன். இரண்டாவது முறையும் சத்தம் கேட்டதென்னவோ உண்மைதான், ஆனால் அப்போதும் கூடி முயங்கியப் பறவைகள் ஒன்றோடொன்று விளையாடுகின்றன என்று நினைத்தே எழுந்துவந்து பார்க்காமல் விட்டுவிட்டேன்’ என்கிறாள். நடந்தது என்னவென்று புரியாமல் நடந்துகொண்டேனே என்ற இரண்டுவரி, காதல் உணர்வில் பொங்கி வழிவது.

முன்பின் நிகழ்வை ஒப்பிட்டுப் புரிந்துகொள்வதில்தான் அன்பின் பரிபூரணத்தைப் பெறமுடியும். ராதிகாவை நோக்கித் திரும்பிவந்த கண்ணனின் வார்த்தைகள், `இல்லோன் இன்பம் காமுற்றா’வுக்கு இணையானவை. நான்காவது அத்தியாயத்தில் வரும் 91ஆம் பாடல்,திரும்பிவந்த கண்ணன், ராதிகாவின் தாமரைபோன்ற பாதங்களைக் குனிந்து வணங்கினான். அது, திரளான தேனீக்களின் சலசலப்பு போலிருந்தது’ என்று முத்துபழனி எழுதியிருக்கிறார். காப்பியத்தில் இடம்பெற்றுள்ள பாடல்களில் பெரும்பகுதி, ஆண்பெண் கலவி குறித்தே அமைந்துள்ளன. பெண்களின் தாப உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தே முழுக் காப்பியத்தையும் படைத்திருக்கிறார்.

இலாவானாலும் ராதிகாவானாலும் கண்ணனுக்காகவே கரைகிறார்கள். கண்ணனும் அவர்கள் இருவரையும் திருப்திப்படுத்தும் முகாந்திரங்கள் எவையென்பதைக் குறித்தே சிந்திக்கிறான். இரண்டுப் பெண்களுக்கும் இடையே சிக்கிக்கொண்ட கண்ணன், அவர்களை மீறி எங்கேயும் செல்வதாகக் குறிப்புமில்லை. அதேபோல, இரண்டு பெண்களும் அவனை மட்டுமே எண்ணியெண்ணி நைகிறார்கள். காப்பியத்தின் முக்கியமான அம்சம் என்னவெனில், காமத்தைப் பிரதானப்படுத்தினாலும் அது, உள்ளத்தின் உணர்வுகளையும் பதிவுகளாக அமைந்திருப்பதுதான். ராதிகாவின் கூற்றாக `கண்ணன், அழகான பெண்களின் இதயத்தைக் கடைபவன்’ என்று முத்துபழனி எழுதியிருப்பதை ரசிக்கலாம்.

காப்பியத்தில் இடம்பெற்றுள்ள மூன்று காட்சிகள், முதன்மையானதாக எனக்குத் தோன்றிற்று. அம்மூன்று காட்சிகளையும் ஆண்களால் எழுதமட்டுமல்ல, யோசிக்கக்கூட முடியாது. பெண்ணே பெண்ணின் உணர்வுகளை எழுதும்போதுதான் உள்ளார்ந்த வெளிப்பாடுகளைப் பெறமுடியும். வார்த்தைக்கும் வாதத்திற்கும் ஆண் பெண்போலவும் பெண் ஆண்போலவும் சிந்திக்கத் தடையில்லை எனலாமே தவிர, உண்மையில் அது சாத்தியமில்லை என்பதையே முத்துபழனி நிறுவியிருக்கிறார்.

முதல்காட்சி, பூப்பெய்தியவுடன் ராதிகாவின் உடலுடன் தன்னுடலைப் பொருத்திப்பார்த்து இலாதேவி பொருமுவது. தன்னைவிட அழகாகவும் பூரிப்பாகவும் இருக்கும் ஒரு பெண்ணை, இன்னொரு பெண் பார்த்து அங்கலாய்க்கும் உணர்வுகளை முத்துபழனியே முதன்முதலில் பட்டவர்த்தனப் படுத்தியிருக்கிறார். உடல் சார்ந்து ஒரு பெண்ணுக்கு ஏற்படும் மனக்குறைவும் பொறாமையும் சிக்கலுக்குரியவை. பெண்ணை வெறும் உடலாக ஓர் ஆண் பார்ப்பதற்கும் இதற்கும் வித்யாசமுண்டு. பெண்ணை இச்சைக்குரிய பொருளாக ஆண் பார்ப்பது ஏற்புடையதில்லையென அறிவுச்சமூகம் பேசுகிற அதேநேரத்தில், ஒரு பெண்ணே தன்னுடல் குறித்து ஏற்படுத்திக்கொள்ளும் பார்வைகளை, சமூக மதிப்பீடுகளை மீறியும் முன்வைக்க முத்துபழனியால் முடிந்திருக்கிறது.

`ராதா, தன் அபரிமிதமான மார்பகங்களை / அசுரர்களை அழித்த கிருஷ்ணனுக்கு வழங்கும்போது / சிறுமி இலா புலம்புவாள் /என்னிடமில்லையேயென்று / ராதா, தன் சிவந்த இதழ்களை அவனுக்குப் பரிசாக வழங்கும்போது / சிறுமி இலா புலம்புவள் / தன்னுடைய இதழ்களில் இத்தனை தீஞ்சுவை இல்லையே என்று’ என நீளும் அப்பாடலில் உணர்வுகள் உக்கிரத்துடன் வெளிப்பட்டுள்ளன. இரண்டாவது காட்சி, இலாவை முதலிரவு அறைக்குள் அலங்கரித்து அனுப்பிய ராதிகா, தன்னுடைய காதலனை இன்னொருத்திக்குத் தாரைவார்த்துவிட்டு திரும்பும் சூழலைச் சொல்வது. ஆற்றாமையுடனும் அடங்கவொண்ணா கோபத்துடனும் அவள் திரும்புவதைக் காதலின் உச்சமென்பதா, பெண் மனதின் சிடுக்கென்பதா தெரியவில்லை.

இலாவும் கண்ணனும் என்னென்ன மாதிரியான கூடலில் ஈடுபடுவார்களோ எனக் கற்பனை செய்யுமிடத்திலும் ராதிகாவின் மெல்லிய பொறாமையின் குரலைக் கேட்கலாம். தன்னைவிட, வயது குறைந்த இலா, சந்தோசத்தில் திளைக்கும்போது தான்மட்டும் வெறுமையிலும் தனிமையிலும் தவிக்கிறேனே என எண்ணுகிறாள். தன்னைவிட சிறப்பான காதலையோ காமத்தையோ இலாவால் தரமுடியாதெனவும் யோசிக்கிறாள். இலாவைச் சயன அறைக்குத் தயாரித்து அனுப்புவதற்கு முன்பாக, கண்ணனிடம் இலாவின் உடல் குறித்தும், இலாவிடம் கண்ணனின் இச்சைகுறித்தும் சொல்லும் அறிவுரைகள், பொறுப்புமிக்கவை.

அந்தப் பொறுப்புமிக்க வார்த்தைகளை ஆலோசனையாகவும் அறிவுரையாகவும் வழங்கிய ராதிகாவே, பிற்பகுதியில் இப்படியெல்லாம் யோசிக்கிறாள் என்பதுதான் காப்பியத்தின் நுட்பம். இலா பூப்பெய்திய நொடியிலேயே அவள் உடல்முழுவதையும் ஒருமுறை ஏறிட்டுப் பார்த்த ராதிகா, அனுபவமுள்ள எனக்கு நீயா போட்டியாகப் போகிறவள்’ என நகைத்துக் கன்னத்தைக் கிள்ளிய காட்சியை இத்துடன் இணைத்துப் பார்க்கலாம். மிகச் சிக்கலான உளவியலைக்கூட போகிறப்போக்கில் எழுதிவிடும் முத்துபழனி,ஒருத்தியால் விலையுயர்ந்த ஆபரணங்களை விட்டுக்கொடுக்க முடியும் / உறவுகளையும் மதிப்புமிக்க பொருள்களையும் விட்டுக் கொடுக்கமுடியும் / ஆனால், வாழ்வை விட்டுக்கொடுக்க முடியுமா’ எனக் கேட்டிருக்கிறார். இந்தக் கேள்வி அவர் வாழ்விலிருந்தும் சூழலிலிருந்தும் பிறந்தவை.

மீளவும் தஞ்சை நாயகியே கதியென்று போய்விட்ட, பிரதாப் சின்ஹாவை மனதில் இருத்தியே அவர் இவ்வார்த்தைகளை எழுதியிருப்பாரோ எனச் சிந்திக்க இடமுண்டு. `கண்டேன் காதலை’ என்னும் திரைப்படத்தில் தன் வாழ்வை மீட்டுக் கொடுத்தவளைக் காணாமல் கதாநாயகன் தேடுவதாக வந்தச் சூழலுக்குக் `கண்ணிமையில் ஓர் ஆசை ஊஞ்சலிடும் வேளையில் / உண்மைகளை உள்மனது காண்பதில்லை / புன்னகையில் நான் தூங்க ஆசைப்பட்ட வேளையில் / முள் மடியில் தூங்கும் நிலை நியாயம் இல்லை / மேகம் நீங்கிப் போகும் என / நீலவானம் நினைப்பதில்லை / காலம்போடும் வேலிகளை / கால்கள் தாண்டி நடப்பதில்லை / வாழ்ந்துபோகும் வாழ்க்கையிலே / நமது கையில் ஏதும் இல்லை’ என்று எழுதியிருக்கிறேன். நான் மொழி அறிந்தேன்’ என்னும் பல்லவி தாங்கிய அப்பாடல், வித்யாசாகரின் இசையில் வெளிவந்தது. அத்திரைப்படம், இந்தியில் வெளிவந்தஜப் வி மெட்’ டின் தமிழாக்கம்.

காதலின் பிரிவையும் வலியையும் சொல்லி வெளிவந்த அத்தனைப் படைப்புகளுக்கும் மேலான ஒன்றையே முத்துபழனி தந்திருக்கிறார். கண்ணனை நினைத்து கண்ணீர் விட்ட நிலையில், அக்கண்ணீர் துளிகள் ராதிகாவின் இரண்டு மார்புகளுக்கு இடையே வழிந்தோடியதாகக் கற்பனைச் செய்கிறார். அது, `மேரு மலையிலிருந்து வீழும் நீர்வீழ்ச்சி போலிருந்தது’ என்னும் இடத்தைக் கவனிக்கவேண்டும். இன்னொரு இடத்தில் ராதிகாவின் சேலை விலகலைப் பார்த்த சூரியன், மாலை நேரத்தை நோக்கி ஓடிப்போய் ஒளிந்துகொள்கிறது என்கிறார். தாபம் மிகுந்த பெண்ணின் உடலியல் மாற்றங்கள், சோகத்திலும் சந்தோசத்திலும் ஒரே மாதிரி இருப்பதில்லை என்பதைத் திரும்பத் திரும்ப எழுதியிருக்கிறார். அந்தந்த நேரத்து உணர்வை, உடலும் உறுப்புகளும் வெளிப்படுத்துகின்றன என்பதற்காக வரிசையாக அவர் அமைத்துள்ள பதங்கள், அலாதியானவை.

அத்துடன், வாழ்வை விட்டுக்கொடுக்கமுடியுமா எனக் கேட்ட அவரே, இறுதி அத்தியாயத்தில் திரும்பி வந்த கண்ணனிடம் ராதிகா காட்டும் நெருக்கத்தையும் சிந்தித்திருக்கிறார். ராதிகா சாந்தவனத்தின் முழுமையிலும் முத்துபழனியே தென்பட்டாலும் அவர், தன்னை இலாவாகப் பாவித்துக்கொள்கிறாரா, ராதிகாவாகக் காட்டிக்கொள்கிறாரா எனப் புரிந்துகொள்ள இயலவில்லை. இரண்டு பெண்களையும் ஒரே தளத்திலும் தன்மையிலும் வைத்தே விவரிக்கிறார்.

என்னைக் கவர்ந்த மூன்றாவது காட்சி, கண்ணன் ராதிகாவை நோக்கித் திரும்பி வந்த பின் அவர்களுக்கு இடையே நடக்கும் உரையாடல். ராதிகா தன்னுடைய காதலையும் காமத்தையும் நியாயப்படுத்தும் இடங்கள். `வயது மூத்த, அத்தை முறையுள்ள பெண்ணான எனக்கு, உன் மீது ஏற்பட்ட பிணக்கும் பிரியங்களும் இயல்பானதே’ என வாதிடும் தருணம். தன்னுடைய வாதத்தை விளங்கவைக்க ராதிகா எடுத்துவைக்கும் அடுக்கடுக்கான கேள்விகள், முத்துபழனியின் இதிகாசப் புராண அறிவைக் காட்டுக்கிறது. ராதிகா கண்ணனிடம் உலகம் எண்ணுவதுபோல என்னுடைய காதல் தகாததோ தரக்கெட்டதோ இல்லையென்கிறாள்.

அதற்கு அவள்,பிரம்மன், தன் மகளையே மணந்தான் / சந்திரன், குருவின் மனைவியை மணந்தான் / சூரியனோ நண்பனின் தாரத்தைக் கூடினான் / கடலின் கடவுள் தன்னுடைய பேத்தியான கங்கையைச் சேர்ந்தான் / வியாசன் மைத்துனியை உறவு கொண்டான்’ எனச் சொல்லி, `இப்படி எல்லோரும் முறைதவறியே காதலையும் காமத்தையும் பகிர்ந்திருக்கையில் என்னுடைய காதல், தகாததா, கீழானதா’ என்கிறாள். உறவென்பது தேவைகளால் அர்த்தப்படுவதே அன்றி, முறைகளால் தீர்மானிக்கப்படுவதில்லை என்றும் சொல்லாமல் சொல்கிறாள்.

தேவதாசி மரபில் வந்த முத்துபழனி, தன்னைப் பற்றியும் தன்னுடைய குலத்தைப் பற்றியும் சமூகம் வைத்திருந்த மதிப்பீடுகளை உடைக்கும் எண்ணத்திலேயே அவ்வாறான பிரயோகங்களைத் துணிச்சலுடன் கையாண்டிருக்கிறார். அநீதியும் நேர்மையுமற்ற தேவதாசி முறையை ஒழிக்க டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி முன்னெடுத்தப் போராட்டங்கள் ஒருபுறமென்றால், அதற்கு முன்பே காலத்தால் வஞ்சிக்கப்பட்ட முத்துபழனி, அம்முறைக்கு எதிராக வேறொரு வகையில் போராடியிருக்கிறார். மேலோட்டமாகப் பார்த்தால்கூட மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் ஒரு தனிப் பெண் இதற்குமேலும் தன்னுடைய எதிர்ப்புக் குரலை எழுப்ப முடிந்திருக்காது என்றே தோன்றுகிறது.

ஒருபாடல் இருபாடல் என்றில்லை, காப்பியத்தின் மொத்த பாடல்களும் இறையன்பின் இன்பத்தையே பேசுகின்றன. அதுயென்ன இறையன்பின் இன்பம் என்பவர்கள், கலவிகொள்ளும் நிகழ்வைப் பற்றி முத்துபழனி விவரித்து எழுதியுள்ளதை வாசிக்கலாம். புணர்ந்தவர் பிரிதல் ஆற்றா போகம் ஈன்று அளிக்கும் சாயல்’ என்று சீவக சிந்தாமணியில் வருமே அதை ஒத்ததாகவே ஒவ்வொரு பாடலும் தன்னளவில் ருசி தருபவை. காந்தருவ தத்தையை நெருங்கும் சீவகன்,பூவின் இதழ்கள்கூட சலனப்படாமல் தேனை உறிஞ்சும் தேனீக்களைப் போன்றவன்’ எனச் சீவக சிந்தாமணியில் ஓர் இடம் உண்டு.

அதேபோல கலவியின்பத்தைப் பற்றி முத்துபழனியும் `தேனீயானது மலர்களும் அறியாமல் தேனைப் பருகுவதுபோல அவன், அவள் உடலை மகிழ்விப்பான்’ என்பதாக மூன்றாவது அத்தியாயத்திலுள்ள முப்பத்து எட்டாவது பாடலில் எழுதியிருக்கிறார். தேனீயைப் பற்றி அறிமுகப் படலத்திலேயே இன்னொரு உவமையும் வருகிறது. தன்னுடைய காப்பியத்தை வாசிக்கவுள்ள இலக்கியவாதிகளுக்கும் விமர்சகர்களுக்கும் விடக்கூடிய அறைகூவலாக அவ்வுவமையைச் செய்திருக்கிறார். திரும்பிவந்த கண்ணன் ராதிகாவின் காலைத் தொடும் இடத்தில் வரக்கூடிய தேனீ உவமையை ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன். எங்கேயும் தேனையும் தேனீயையும் தாமரையையும் அவர் விடுவதாகத் தெரியவில்லை.

பொதுவாக ஒரு காப்பியத்தைத் தொடங்கும்பொழுது, இக்காப்பியத்தின் மூலம் நல்லது நடக்கப்போகிறது. மும்மாரியும் முத்தமிழும் பெருகப் போகிறது என்றுதான் தொடங்குவர். ஆனால், முத்துபழனியோ அடுத்தவர்களை அண்டிப் பிழைக்கப் புகழ்பாடும் கவிஞர்களே, உங்களுக்கு இது கெட்ட செய்தி’ என்று ஆரம்பிக்கிறார்.தாமரையில் தேனைக் குடிக்கும் தேனீ மற்ற மலர்களின் தேனையும் அதே இன்பத்துடன் உறிஞ்சிக்குடிப்பதுபோல’ என்னுடைய படைப்பையும் ஏற்றுக்கொள்ளுங்கள்’ என்றிருக்கிறார். அப்படிச் சொல்லியதுடன் நில்லாமல் `ஏ மனமே அவர்களின் விமர்சனங்களுக்கு முக்கியத்துவம் வழங்காதே’ எனவும் கட்டளையைப் பிறப்பிக்கிறார். தான் எதற்குள்ளும் கட்டுப்பட்டு நில்லாதவள் மட்டுமல்ல, என் எழுத்துகள் யாருடைய விமர்சனங்களையும் எதிர்நோக்கிக் காத்திருப்பதில்லை என்றும் தெளிவுபடுத்தியிருக்கிறார். பின்னால் இப்படைப்புக்கு நேரவுள்ள அபாயத்தை முன்னமே யூகித்து எழுதியதுபோல்தான் தெரிகிறது.

கம்பீரமுடைய பெண்ணாகவும் தன் அழகிலும் ஆற்றலிலும் ஒருவித அசாத்தியப் பற்றுடையவராகவுமே முத்துபழனியை அணுகவேண்டும். தென்னகமொழிகளின் மையத்தின் தலைவர், எஸ்.ராமமூர்த்தி `என் முலைகளைப் பிடிப்பவன் கோட்டைக்கு அதிபதியாகவும், என் முகத்தைப் பார்ப்பவன் அரசனாகவும் ஆகும் தகுதியுடையவர்கள் என முத்துபழனியே கூறியதாக அறிகிறோம்’ என்று குறிப்பிட்டிருக்கிறார். அச்சொற்றொடரை அவர் எங்கிருந்து பெற்றாரெனத் தெரிவிக்கவில்லை. ஆனால், மிடுக்கும் துடுக்கும் நிறைந்த தேவதாசிப் பெண்கள், அரசவையிலும் மக்கள் மத்தியிலும் பெற்றிருந்த செல்வாக்கை அக்கூற்றுகள் மெய்ப்பிக்கின்றன.

பழந்தமிழ் இலக்கியத்தின் பரிச்சயமும் பாண்டித்தியமும் உடைய பெண்கவியாக முத்துபழனி இருந்திருக்கிறார். ஒன்றை அடுக்கிக்கொண்டேபோய் இறுதியில் அவர் வைக்கும் முத்தாய்ப்புகள் இருக்கின்றனவே அவற்றை மட்டுமே தனிக் கட்டுரையாக எழுதலாம். ராதிகா சாந்தவனத்தை வாசிக்க வாசிக்க, தொல்குடி சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணின் ஆவலும் ஆத்ம விசாரமும் எத்தகையன என விளங்கிக்கொள்ள முடிகிறது. காமத்தை ஒரு பெண் எழுதினால், அவள் சமூக மதிப்பீட்டில் என்னவாகப் பார்க்கப்படுவாள் என்ற யோசனையே இல்லாமல் எழுதிச் சென்றுள்ள வரிகள், சில இடங்களில் பதட்டத்தையும் சில இடங்களில் பரவசத்தையும் அளிக்கின்றன. நவீன கவிதைகளில் தென்படும் பூடகமோ பூச்சுகளோ துளியுமில்லாமல் வெளிப்படையாகக் காமத்தைப் பகிர்ந்திருப்பது ஆச்சர்யமளிக்கிறது.

கீதகோவிந்தத்தில் ராதாவின் பாதங்களைக் குனிந்து தொடும் பகுதி ஒன்றுண்டு. அப்பகுதியை எழுதும்போது ஜெயதேவரின் கைகள் நடுங்கினவாம்.லோகமே கடவுளாக வழிபடும் ஒருவர், பெண்ணின் காலைத் தொட்டு வணங்குவதாக யோசித்துவிட்டோமே எனப் பதறிய ஜெயதேவர், எழுதியவற்றை அப்படியே வைத்துவிட்டு கங்கையில் குளிக்கப்போனாராம். போனவர் முங்கியெழுந்துவந்து பார்த்தால் எழுதப்படவேண்டிய வரிகள் கண்ணனால் எழுதப்பட்டிருந்ததாம். கண்ணனே வந்து எழுதியதாகச் சொல்லப்படும் அப்பகுதி, பெண்ணுக்குக் கண்ணன் அளித்த இடத்தையும் இதயத்தையும் காட்டுவதாக ஆன்மீகப் பெரியவர்கள் பிரசங்கம் செய்வர்.

முத்துபழனி, இந்தக் காட்சியை வேறுமாதிரியாக எழுதியிருக்கிறார். அதாவது, இலாவிடமே நெருக்கத்தைக் காட்டிய கண்ணனிடம் நிலையை அறிந்துவர ராதிகா கிளி ஒன்றைத் தூதாக அனுப்புகிறாள். தூது சென்ற கிளி, இலா – கண்ணனின் படுக்கையறைக்குள் நுழைகிறது. அங்கே அவர்கள் இருவரும் இருந்த கோலத்தைப் பார்த்துவிட்டு வந்த கிளி, `இனிமேல் கண்ணன் உன்னை நினைப்பானா என்பது சந்தேகம்’ என்கிறது.

கிளி வந்துவிட்டுப் போவதைப் பார்த்த கண்ணனுக்கு, ராதிகாவின் நோக்கமும் ஏக்கமும் பிடிபட ஓடிவருகிறான். வந்தவன், ராதிகாவைச் சாந்தப்படுத்தக் காலைத் தொடுகிறான். அவளோ கோபத்தில் கண்ணனின் தலையை ஓங்கி உதைக்கிறாள். ராதையின் காலைத் தொடுவதாக எண்ணியதே பாவமென்று ஜெயதேவர் பயந்தது ஒருபுறமிருக்க, ராதிகா காலால் கண்ணனின் தலையில் உதைவிடுகிறாள் என்று முத்துபழனி யோசித்திருக்கிறார். புனிதங்களைக் கட்டுடைத்தல், புதிய பொருளையும் சிந்தனையையும் முன்வைத்தல் என்பதாக முத்துபழனியின் எழுத்துகளைக் கருதலாம். ஜெயதேவரின் கீதகோவிந்தத்தை ஒத்த காட்சிப் படிமத்தை முத்துபழனியின் பாடலிலும் காணமுடிவது தற்செயலில்லை.

தெலுங்கு இலக்கியத்தின் முதல் கலகக் குரலாக இன்றுவரை பார்க்கப்படும் முத்துபழனியின் காப்பியத்தை 1887இல் சார்லஸ் பிளிப் ப்ரவுன் என்பவரே பதிப்பித்திருக்கிறார். பிரதியை சரிபார்த்துப் பதிப்பிக்கும் பொறுப்பிலிருந்த வெங்கட்டன்னராசு காப்பியத்தில் தென்பட்ட சிக்கலானப் பகுதிகளை நீக்கியே வெளியிட்டிருக்கிறார். முதல் பதிப்பில் நீக்கப்பட்ட பகுதிகள், முத்துபழனி தன்னைப் பற்றியும் தன்னுடைய பாட்டியைப் பற்றியும் தெரிவித்திருந்தவை. தேவதாசி மரபில் வந்தவளே தானென்று அவர் எழுதியிருந்த பகுதிகள் தேவையில்லாமல் நீக்கப்பட்டதை நாகரத்தினம்மாவே கண்டுபிடிக்கிறார். 1905இல் மறுபதிப்பாக வந்த நூலையும் தன் கைக்குக் கிடைத்த பழைய ஓலைச்சுவடியை ஒப்பிட்டு, விடுபட்ட பகுதிகளைச் சேர்த்துப் பதிப்பித்திருக்கிறார். இதற்காக `ஒரு விபச்சாரி, இன்னொரு விபச்சாரியின் எழுத்தைப் பதிப்பித்திருக்கிறாள்’ என்னும் வசையையும் வாங்க நேர்ந்திருக்கிறது.

வசையைப் பொழிந்த கந்துகூரி வீரசேலிங்கம் பந்துலு, அந்தக் காலத்தில் இலக்கிய விமர்சகராகவும் பெண்களின் உரிமைகளுக்குப் பாடுபடுவராகவும் அறியப்பட்டிருக்கிறார். காலம்தோறும் ஒருசிலர் இருப்பதும் இயங்குவதும்தான் இலக்கியத்தின் சுவாரஸ்யம்போல.
விமர்சனத்துடன் நிறுத்தாலும் எப்படியாவது அந்நூலைத் தடைசெய்வதற்கு அவர் மேற்கொண்ட மூர்க்கங்களும் முயற்சிகளும் ஒன்றிரண்டல்ல. சாந்தவனத்தைவிடவும் ஆட்சேபிக்கத் தக்க வரிகளைக் கொண்டுள்ள `வைஜெயந்திவிலாசம்’ எனும் நூலைத் தடுக்காதவர், முத்துபழனியையும் நாகரத்தினம்மாவையும் ஒருசேர எதிர்த்து, விமர்சித்ததை நீதிமன்றமும் ஆட்சியாளர்களும் ஏற்றதுதான் வேடிக்கை. சுதந்திரத்திற்கு முற்பட்ட காலங்களில் நிகழ்ந்த இந்தக் குளறுபடிகள், சென்னையின் முதல் மாகாண முதல்வராகப் பிரகாசம் வரும்வரை தீராமல் நீடித்திருக்கின்றன.

நாகரத்தினம்மாவே பல்வேறு வகைகளில் முயற்சித்து, அந்நூலை எப்படியாவது வெளிக்கொணர்ந்து பரவலாக்கும் எண்ணத்துடன் பாடுபட்டிருக்கிறார். ஓர் இசையையோ ஓர் இலக்கியத்தையோ அதன் அடிப்படை சாராம்சத்தை உள்வாங்காமல் விமர்சிப்பவர்கள் அன்றைக்கும் இருந்திருக்கின்றனர் என்பதுதான் ஒரே ஆறுதல். ராதிகா சாந்தவனத்தை தடைசெய்ய பிரிட்டன் சட்டவல்லுநர்கள், உலகச் சட்டங்களையெல்லாம் ஒப்புநோக்கினர் என்னும் செய்தியைப் படித்ததும் சிரிக்கத் தோன்றிற்று.

எழுத்து, சமூகத்தைச் சீரழிரித்துவிடும் என்பதும், மக்களையும் அவர்கள் பேணிக்காத்துவரும் ஒழுக்கத்தையும் பாழ்படுத்திவிடும் என்பதும் அதீதக் கற்பனையே அன்றி வேறில்லை. பயங்கரவாதத்தை ஒழிக்க அப்பாவி மக்கள்மீது ராணுவத்தை ஏவிவிடும் அரசுகள், பயங்கரத்திலும் பயங்கர கேடுகளைப் புரிவன. எளிய மக்கள், தம்முடைய ஏக்கங்களையும் எதிர்பார்ப்புகளையும் எழுதிக்கொண்டே இருப்பர். காகிதங்களுக்கு மட்டுமே அரசுகளால் தடை விதிக்கமுடியும். கருத்துகளை ஒன்றும் செய்யமுடியாது. அடையமுடியாத ஒன்றின்மீது வைக்கும் அன்புதான் பக்தியோ என்ற கேள்வியுடன் தொடங்கிய இப்பதிவை, அடைந்துவிட்ட ஆட்சியும் அதிகாரமும் பக்தியை முன்வைத்து நடத்தும் அன்பற்ற செயல்களுடன் இணைத்துப்பார்க்கையில் வேதனையளிக்கிறது. பக்தியென்பது மதமற்ற இரண்டு மனிதர்களுக்கு இடையே எப்போது பரவுமோ, அதை நானுமே அறியேன் பராபரமே.

ஆசிரியர்: யுகபாரதி

யுகபாரதி, தஞ்சாவூரைப் பூர்வீகமாகக் கொண்டவர். கணையாழி, படித்துறை ஆகிய இதழ்களின் ஆசிரியக் குழுவில் ஆறு ஆண்டுகளுக்கு மேல் இலக்கியப் பங்களிப்புச் செய்தவர். தொடர்ந்து இரண்டு முறை சிறந்த கவிதை நூலுக்கான தமிழக அரசின் விருதைப் பெற்றவர். இதுவரை பதின்ஒன்று கவிதைத் தொகுப்புகளும் பதின்நான்கு கட்டுரைத் தொகுப்புகளும், தன்வரலாற்று நூல் ஒன்றும் எழுதியுள்ளார். இந்நூல், இவருடைய பதிமூன்றாவது கட்டுரைத் தொகுப்பு. வெகுசனத் தளத்திலும் தீவிர இலக்கியத்தளத்திலும் ஒருசேர இயங்கிவரும் இவருடைய திரைஉரையாடல்கள் குறிப்பிட்டுச்சொல்லத்தக்கக் கவனத்தைப்பெற்று வருகின்றன. திரைமொழியையும் மக்கள்மொழியையும் நன்கு உணர்ந்த இவர், ஏறக்குறைய ஆயிரம் திரைப்-பாடல்களுக்குமேல் எழுதியிருக்கிறார். இவரே இன்றைய தமிழ் சினிமாவின் முன்னணிப் பாடலாசிரியர்.

பின்னூட்டமொன்றை இடுக