கண்டும் காணாமல்

ஒருபாட்டு, கொஞ்சம் பின்னணி: 21

புழங்காத வீட்டில் ஒட்டடைகளும் புரிந்துகொள்ளப்படாத அன்பில் குழப்பங்களும் மண்டிவிடுகின்றன. எது ஒன்றும் நமக்கு மட்டுமே உரியதெனும் நம்பிக்கைப் பொய்யானது. எல்லாமே மாயச் சகடமென்று வேதாந்தம் பேச விரும்பவில்லை. ஆனால், அதுவே எதார்த்தம் . நட்பையும் அன்பையும்கூட ஓரளவுக்குமேல் உரிமை கொண்டாடினால் உடைந்துவிடும். பிரியங்களின் நீட்சியே பிணக்கும் பிரிவுமென்றால் காப்பாற்றப்படலாம்.

கரு.பழநியப்பனின் `பிரிவோம் சந்திப்போம்’ திரைப்படம் இதைச் சொல்லவதுதான். கணவனின் அங்கீகரிப்பையும் அன்னோன்யத்தையும் மனைவி எதிர்பார்க்கிறாள். கனவுகள் சுமந்த அவள் கண்களுக்கோ தகிக்கும் நெருப்பாக தனிமையே வாய்க்கிறது. உணர்ந்துகொள்ளப்படாத உண்மைக்கும் புன்னகைக்கும் பொருளில்லை. இன்பமே இல்லறமென்று எண்ணி வந்தவளைத் துயரமும் தூக்கமின்மையும் துரத்துகின்றன. இந்த இடத்தில் பாடல் வருகிறது.

பழநியப்பன் தலைப்பை ஒட்டி முழுபாடலையும் முரண் தொடையில் எழுதித்தரும்படி கேட்டுக்கொண்டார். இரவு x பகல், நன்று x தீது என்பனபோல `கண்டும் காணாமல் விழி காண்பது ஏன் / கேட்டும் கேளாமல் செவிக்கேட்பது ஏன் / வந்து போவது ஏன் / தந்து கேட்பது ஏன்’ என்று பல்லவியை எழுதினேன். மெட்டிற்கு எழுதினாலும் கதையும் சூழலும் பொருந்திவரக் கண்ட இசையமைப்பாளர் வித்யாசாகர், கட்டியணைத்துப் பாராட்டினார்.

எழுத தோதான மெட்டிலும், என்ன எழுதுகிறோம் என்பதுதான் முக்கியம். இலக்கியத் தொடர்ச்சியை எனக்கு முன்னே இருந்த பல பாடலாசிரியர்கள் பற்றியுள்ளனர். எனினும், இலக்கணத் தொடர்ச்சியை கரு. பழநியப்பன் என்னிடம் கோரினார். அடங்காத இலக்கிய ஆர்வத்தை திரைப்பாடலாக்க ஏங்கும் அவர், மரபிலக்கணப் பயிற்சியுடையவர். தவறுசெய்தால் தப்பிக்கமுடியாது. விவரமறியாமல் அபிப்ராயத்தையோ விமர்சனத்தையோ எறியமாட்டார்.

ஆர்மோனியத்தில் சரணமெட்டு இசைக்கப்பட்டதும், `நினைவுகள்போல மறதியும் வேண்டும் / நேற்றை நீங்க நாளை வேண்டும் /தனிமைகள் தீர துணையும் வேண்டும் / தாங்கும் தோளில் சாய்ந்திட வேண்டும்’ என்றேன். `நினைவுகள்போல மறதியும் வேண்டும் என்பதற்கு எங்களிடையே பெரிய விவாதமே தொடங்கிற்று. நினைவுகள் தொடர்ந்திருந்தால் மறதிகள் வருமா என்பதுதான் அவ்விவாதத்தின் புள்ளி. `நினைக்கத்தெரிந்த மனமே உனக்கு / மறக்கத் தெரியாதா’ எனக் கண்ணதாசன் எழுதவில்லையா என்று கரு. பழநியப்பனே வித்யாசாகரை மசிய வைத்தார். வாதம் சிலசமயம் வைப்பவரின் திறமையைப் பொறுத்தே ஏற்கப்படுகிறது.

அடுத்தக் கேள்வி `நேற்றை நீங்க வேண்டுமா’ என்பது. வித்யாசாகர், `நேற்றின் தொடர்ச்சிதானே இன்றும் நாளையும். நேற்று நடந்த திருமணத்தை நீங்கிவிடுவதால் இன்றையச் சர்ச்சைகளும் சச்சரவுகளும் நீங்கிவிடுமா யோசி’ என்றார். தவிர, அவள் அவனை ஒருநாளும் விலகிவிடவோ நீங்கிவிடவோ எண்ணவில்லை. நேர்ந்துவிட்ட போதாமையை எண்ணியே புலம்புகிறாள். சரிசெய்யத் தெரியாமல் தவிக்கிறாளே அன்றி தள்ளிப்போகவா நினைக்கிறாள்’ என்றும் கேட்டார்.

அப்படியெனில், `நேற்றும் நீங்க’ என வைத்துக்கொள்ளலாமா என்றேன். ஆமோதித்த அவர் மரபையும் வேரையும் நீங்க விரும்பாதவர். நாளை நீங்குவதில் பிரச்சனையில்லை. நம்பிக்கைகளை நீங்குவதானே துயரம். ஒருசொல்லில் ஒரு எழுத்து அதன் அர்த்தத்தைக் கூடுதலாக்கிவிடும். நிம்மதி தேவையெனில், பிரிவதும் பேசாதிருப்பதுமே உசிதம். ஆயினும் குடும்பமற்ற உறவில் குதூகலமில்லை.

கதையின் பிரச்சனை இணைந்து வாழ்வதில் ஏற்படும் சிக்கல் என்பதால் குடும்ப அமைப்பைக் கேள்விக்குட்படுத்தாமல் அன்பையும் புரிதலையுமே பிரதானப்படுத்தினேன். குறைகள் இருந்தாலும் குடும்பத்தையும் அமைப்பையும் குலைத்துவிட எண்ணுவது, கோட்டையை இடித்துவிட்டுச் செங்கல்லைச் சிலாகிப்பது. ஈரசை மூவசைகளாக விளைந்த மெட்டைக் குறிலிணைகளாக வித்யாசாகர் மாற்றிக்கொடுக்க, `அருகிலே வந்த போதிலும் / ஏனோ தூரமே / நினைவிலே தேங்கும் ஞாபகம் / நீங்குமோ எந்த நாளுமே’ என்றேன். இரு குறில்கள், நெடில் அளவை எட்டுவதே இலக்கணக் கணக்கு.

சரணத்தின் இறுதியில் இத்தனைப் பாடுகளும் எதற்கென்ற கேள்வியை நானே கேட்டு, `சேருவோம் சேருவோம் வாழவே’ என்று முடித்தேன். இந்த பூமியில் யார் ஒருவரும் நமக்கு மட்டுமே உரியவர் இல்லை. நாமுமே பிறருக்கு அப்படித்தான். சந்தர்ப்பங்கள் வாய்த்தால் ஒருவர், இன்னொருவர்மீது சாய்வு கொள்வதே சகஜம். அந்தச் சாய்வில் அடிப்படை அறமும் அன்புமே பிறழ்ந்துவிடும் அபாயமுண்டு.

வேறுபாடுகளை விளங்கிக்கொள்ளும் பக்குவமில்லாதவர்கள், அன்பிலும் நட்பிலும் தோற்றுவிடுவர். புதிய உறவில் பூரிப்பதாகக் காட்டி, தங்களை தாங்களே ஏமாற்றிக்கொள்வர். `உறவுகள் நீங்கி வாழும் வாழ்வில் / ஏங்கும் நொடிகள் சுமையென தெரியும் / திரைகடல் ஓடி தேடும் தேடல் / தீரும் போது தொலைந்தது தெரியும்’ என்று அடுத்தச் சரணத்தை ஆரம்பித்ததும், பழநியப்பனும் வித்யாசாகரும் நிறைவுடன் நிமிர்ந்து பார்த்தனர்.

தேடல், தேவை என ஆலாய்ப் பறந்தாலும் அவையும் ஒரு கட்டத்தில் அலுப்பையும் சலிப்பையும் தந்துவிடுகின்றன. வாழ்வின் இறுதிவரை தேடுவதாக நாம் செய்யும் கற்பிதமே கவலைகளின் வாசல். அதேபோல தேர்ந்ததில் ஏற்படும் சந்தேகங்ளே சஞ்சலத்தின் சங்கிலி. மனதிலும் உடலிலும் மாற்றுத் தேடுபவர்கள், பூரண அன்பை ஒருபோதும் பெறுவதில்லை.

விட்டுக்கொடுத்தல் அவசியமே எனினும், தேவைக்காகவும் தேடலுக்காகவும் அன்பை விட்டுக்கொடுப்பவர்கள் கக்கடைசில் அநாதையாகவே நிற்கநேரும். `சிறகுகள் வாங்கும் ஆசையில் / வானை நீங்கினோம் / விடைகளை தேடும் ஆவலில் / கேள்வி போல் நாளும் தேங்கினோம் / மாறுதல் ஆறுதல் ஆகுமே’ என்று எனக்குத் தெரிந்த தத்துவத்தை எளியச் சொற்களில் எழுதிக்காட்டினேன். ஏற்பவர்களின் இதய விசாலத்தைப் பொறுத்தே தத்துவத்தின் தரிசனங்கள்.

மாறுதலே ஆறுதல் என்பது தேறுதல் அல்ல. தீர்வு. ஏனெனில், மையமிடும் சோகங்களையும் வேதனைகளையும் தூக்கிக் கொஞ்சினால் தூளாகிவிடுவோம். விளக்கைத் துலக்குவதால் வெளிச்சம் வருவதில்லை. சூட்சமமென்பது சுடரைத் தூண்டுவது. காரணங்கள் அவதிகளைப் பிரசவிக்குமே அன்றி காயங்களுக்கு மருந்தாவதில்லை. பெரிய பெரிய அனுபவங்கள் எனக்கில்லை. வாழ்வின் தாழ்விலும் உயர்விலும் ஒரேமாதிரி இருப்பதைத் தவிர நான் கற்றறிந்ததும் ஒன்றுமில்லை. இப்பாடல் வரும்போது எனக்குத் திருமணமாகவில்லை. ஆனாலும், ஒரு பெண்ணை எப்படி நடத்தவேண்டுமென ஊகித்து வைத்திருந்தேன்.

சகபயணியே மனைவியென்னும் புரிதலில் அவளுக்காக என் திருமணப் பத்திரிகையில் கவிதை ஒன்றும் எழுதியிருந்தேன். அக்கவிதையில் `வேலைக்குக் கிளம்பும்போது / அழுவதைத் தவிர்க்கவேண்டும் / வெறுங்கையோடு திரும்பி வந்தால் / வெகுளியாய்ச் சிரிக்கவேண்டும்’ எனவும் கேட்டிருந்தேன். எண்ணமே வாழ்வு. என் எண்ணங்கள் எப்பொழுதுமே பலித்துவிடுகின்றன. அன்பிலே புழங்கும் என் வீட்டை ஒட்டடைகள் அண்டுவதில்லை.