கொக்கரக் கொக்கரக்கோ

ஒருபாட்டு, கொஞ்சம் பின்னணி: 11

டைந்து நொறுங்கும் பொழுதுகளில் ஆதரிக்க தோள்களும், அக்கறைகளைப் பகிர சில நம்பிக்கைச் சொற்களும் தேவைப்படுகின்றன. அவற்றை யார் அளிக்கிறார்களோ அவர்களே நம் நிழல். மன, மத மாச்சர்யங்களைக் கடந்த அச்சொற்களைப் பெறுவதற்கே நட்பையும் அன்பையும் பேணுகிறோம். தெலுங்கில் வெளிவந்து பெருவெற்றி பெற்ற `ஒக்கடு’ திரைப்படம் தமிழில் மீளாக்கம் செய்யப்படவுள்ள சேதியை இசையமைப்பாளர் வித்யாசாகரே எனக்குத் தெரிவித்தார்.


தில், தூள் எனத் தொடர் வெற்றியைக் குவித்த தரணி இயக்கவுள்ள செய்தி எதிர்பார்த்ததுதான். ஒக்கடு திரைப்படத்திற்கு மணிசர்மா இசையமைத்திருந்தார். ஆனாலும், தமிழில் அவ்வாய்ப்பு வித்யாசாகருக்கு வழங்கப்பட்டது. தில்லையும் தூளையும் இசையாலும் தூக்கிநிறுத்திய பெருமை வித்யாசாகரின் மேதமை. தரணியும் வித்யாசாகரும் ஆதரவிலும் அக்கறையிலும் ஒருவரை ஒருவர் விஞ்சியவர்கள். இசை, இயக்கம் என்கிற பாகுபாட்டைக் களைந்த நட்பு அவர்களுடையது.


ஒருவரை ஒருவர் அங்கீகரித்து படையூக்கத்துடன் செயல்படுவார்கள். அவர்கள் இருவருடனும் இணைந்து பணியாற்றுவது குளுகோஸ் குடோனுக்குள் சிக்கிக்கொள்வதுபோல. உற்சாகவும் உள்ளன்பும் மிகுந்துவிடும். சமயத்தில் திணறடித்துவிடும். நகையும் நளினமும் கூடின ரசனைகளில் ததும்பலாம்.


மணிசர்மா, வித்யாசாகர், ஏஆர்.ரஹ்மான், ரமேஷ் விநாயகம் எல்லோருமே எஸ்.ஏ. ராஜ்குமாரின் இசைக்கு உதவியவர்கள். தனித் தனித் திறமையாளர்கள்.

கூட்டுவாழ்வில் இசைப் பைங்கிளிகளாக இயங்கியவர்கள். ஆனாலும், ஒருவரை ஒருவர் பிரதியெடுக்காத பண்பாளர்கள். மணிசர்மா ஒக்கடுவில் `செப்பவே சிறுகாலி’ என்னும் அழகிய மெலடியை மெட்டாக்கியிருந்தாலும், தமிழில் அவ்விடத்திற்கு மெல்லிசையைவிட, துள்ளிசையே தேவையென தரணி விரும்பினார்.


`மெலடி கிங்’ எனும்விதத்தில் செப்பவே சிறுகாலிக்கு இணையாக ஒன்றைத் தருவதில் வித்யாசாகருக்குப் பிரச்சனையில்லை. எனினும், தரணியின் கோரிகையை மதித்து துள்ளிசைக்குத் தயாரானார். அதுவரை அண்ணன் தரணிக்கு நான் எழுதியதில்லை. `வர்ஷ வல்லகி’ என்கிற வித்யாசாகரின் ஒலிப்பதிவுக் கூடத்தில் முன்னறை ஒன்றுண்டு. அது, கூடத்திற்கு வருபவர்களுடன் அமர்ந்துபேச தோதான இடம். பலபேருக்கு அந்த இடம், ஆலமரத் திண்ணை

அங்கேதான் கொக்கர கொக்கரக்கோவுக்கான முழு பாடலும் மெட்டமைக்கப்பட்டது. ஹார்மோனியமோ வாத்தியக் கருவிகளோ இன்றி, மேசையைத் தட்டித் தட்டியே முழு தத்தகாரத்தையும் சொல்ல ஆரம்பித்தார். விளையாட்டாகத் தொடங்கியது. `தன்னன தன்னன தா / தன்னன தன்னன தா / தனக்கு தன்னனதா / தன / னானே தன்தனத்தா’ என்று ஒரே மூச்சில் மொத்த சித்திரமும் மெட்டாக விரிந்தது.

அந்த அழகை வேறெங்கும் பார்ப்பதற்கில்லை. இசையில் வாழ்வது. வாழ்வையே இசையாக்குவது. வித்யாசாகரின் இசையும் நுட்பமும் அத்தகையன. கில்லி, வில்லனுக்கும் காதலுண்டென காட்டி, ஐ லவ் யூ செல்லத்தை பிரபலப்படுத்திய படம். தரணி `ஒக்கடுவைப் பார்த்தாயா தம்பி’ என்றார். `ஆம்’ என்றேன். `பொழுதுவிடிந்துவிட்டது. இனியெதும் கவலையில்லை’ என்பதுதான் சூழல். அதேசமயம், `இருவருக்குள்ளும் காதலிருக்கிறது. அதை நாசூக்காக தெரியாததுபோல சொல்லிவிடு’ என்றார்.

பொழுது என்றதுமே எனக்கு சேவல் நினைவு. கொடுத்த தத்தகாரத்திற்கு `கொக்கர கொக்கரக்கோ, சரியாக அமைந்ததால் இருவரும் பாராட்டினர். வார்த்தைகளாக அல்லாமல் வெறும் ஓசையிலேயே சேவல் கூவுலை பிரதிபலித்தது துள்ளிசை எடுப்பை உயர்த்திக்காட்டியது. மெட்டை உள்வாங்கி உடனே `சுராங்கணிக்கு மாலுக்கண்ணா வா’ என்கிற பதம் தற்செயலாகத் தோன்றியது.

மெட்டைக் கிரகித்ததும் இப்படிச் சில சொற்கள் வந்துவிழும். பாட்டுக்கும் சூழலுக்கும் அவைச் சம்பந்தமில்லை என்றாலும், அப்படி வரக்கூடிய பதங்களில் இருந்தே பாடல்களைக் கட்டுவது என் பயிற்சி. கங்கைஅமரனுடன் ஒரு படத்தில் இணைந்து பணியாற்றிபொழுது, அவரும் இதே உத்தியைக் கையாள்வதாக பகிர்ந்துகொண்டார்.


சுராங்கணிக்கு மாலுக்கண்ணா என்பது சிலோன் மனோகர் பாடிய ஒரு சிங்கள பாய்லா பாடலில் வருவது. அதன் அர்த்தம் அப்போது தெரியாது. `கடலில் வாழும் ஒரு மச்சக்கண்ணி’ என்பதாக மனோகரிடமே விளக்கம்கேட்டு இணைத்துக்கொண்டோம். தரணி, அவருக்குத் தொலைபேசியில் அர்த்தம் கேட்டபோது, சிலோன் மனோகர் தமிழ்த் திரைப்படங்களில் நடிகராகவும் அறிமுகப்பட்டிருந்தார். அவருக்கு ஒரே குஷி.

நடிக்கும் வாய்ப்பென்றே தரணியிடம் பேச ஆரம்பித்தார். வரிக்கு விளக்கமென்றதும் வதங்கியிருக்கலாம். அப்போது மனோகர் தாமாக சில வசனங்களைப் பேசிக்காட்டியதும், வார்த்தைக்கான விளக்கம்பெற தரணி உரையாடலை வெவ்வேறு பக்கத்திற்குத் திருப்பியதும் வேடிக்கை. தனித்துச் சொல்லத்தக்க நகைச்சுவை. கனவுகளால் ஆனதுதானே இவ்வுலகம்.

`கண்ணுக்குள்ள கனவிருக்கு / நெஞ்சுக்குள்ள நினைப்பிருக்கு / யாருக்குள்ள யாரிருக்கா / தெரிஞ்சவங்க யாருமில்லை என்பவை சிலோன் மனோகரின் உரையாடலுக்கான பதிலே அன்றி வேறில்லை. ஆனால், அவ்வார்த்தைகளைப் படத்தில் பார்க்கும்பொழுது, விஜய்யும் த்ரிஷாவும் உள்ளுள்ள உணர்வுகளை வெளிப்படுத்திக்கொண்டதுபோல் தோன்றும். `அதோ பாரு வானம் / துணி துவைக்குது மேகம்’ என்ற தொடர், வான்வெளி செளந்தர்யங்களை நம்பிக்கைக் காட்சியாக நகர்த்தியது.

`ஆசைகொண்ட உயிருக்கெல்லாம் துணையிருக்கு பூமியிலே’ என்றதும், `தம்பி யாரயாச்சும் காதலிக்கிறியா’ என்றார் தரணி. `ஆசையும் உயிரும் இருக்குதுண்ணே, துணைதான் இன்னும் கிடைக்கலை’ என்றதும், வித்யாசாகர் விநோதச் சிரிப்புடன், `சீக்கிரம் காதலோ கல்யாணமோ ஆயிடும்ப்பா’ என்றார். `கல்யாணத்திற்கும் காதலுக்கும் என்ன சம்பந்தம் என்று தரணி துணைக்கேள்வியைப் போட்டதும், கல்யாணமானவர்கள் காதலையும் காதலிப்பவர்கள் கல்யாணத்தையும் தேடுகிறார்கள் என்றார் வித்யாசாகர். சங்குச் சங்கரம்போல / மனசு சுத்துற வேள, யாரால் எதை கணிக்கமுடியும்?

குத்துவிளக்கு, வெள்ளாடு, கந்தனுக்கு வள்ளி, கண்ணனுக்கு ராதை என மங்களச் சொற்களாகத் தேடித்தேடி பாடலை அழகுபடுத்தினேன். நம்ம பக்கமும் காத்து அடிக்கிறதென்று தரணி மகிழ்ந்த தருணம் அது. வாழ்க்கை முழுவதுமே தேடலுடன் தீர்ந்துவிடுகிறது. தேடல் வெற்றியுடன் அனுபவங்களையும் வழங்குவதுதானே ஆனந்தம்?

ஒரு நல்ல புத்தகம், ஒரு நல்ல சம்பவம் படைப்பின் உந்துவிசை. கோழி கூவியா பொழுதுகள் விடிகின்றன எனலாம். எனினும், பொழுதுகள் விடிவதை அறிவிக்க ஒரு கோழியோ சேவலோ அவசியம். உறங்கும் இதயங்களை எழுப்பி, விடியலைக் கற்பித்த மகாபுருஷர்களை இந்த இடத்தில் நினைத்துக்கொள்ளலாம். ஒவ்வொருநாளும் நமக்கானதே. ஆயினும் அது, நமக்கு மட்டுமே ஆனதுமில்லை. முடிந்தவரை வார்த்தைகளை மென்று விழுங்கிவிடும் உதித்நாராயணன் தற்போது தமிழ் படங்களில் அதிகமாகப் பாடுவதில்லை. நானும் தப்பித்தேன்.